Last Updated : 06 Jan, 2024 08:49 AM

 

Published : 06 Jan 2024 08:49 AM
Last Updated : 06 Jan 2024 08:49 AM

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

களத்தில் உற்சாகத்துடன் இறங்கிய மாடுபிடி வீரர்கள்

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் இன்று (ஜன.6) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின்னர் போட்டிகள் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டையொட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதலாவதாக விண்ணேற்பு அன்னை ஆலய காளையும், முருகன் கோயில் காளையும் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து வீரர்கள் உற்சாகமாக மாடுபிடித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ( பொ ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை திரண்டனர். தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டில் 746 காளைகள், 247 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள திடல், சிசிடிவி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று ஆய்வு செய்தார். இதற்கிடையே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் கூறிய போது, ‘‘போதைப் பொருள் கொடுத்து கொண்டு வரப்படும் காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே காளைகள் அவிழ்க்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அதன் மீது பிளாஸ்டிக் குப்பி அணிந்திருக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முன்னேற்பாடு பணி நடைபெற்றுள்ளது. ஆகையால், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x