Published : 19 Aug 2014 09:30 AM
Last Updated : 19 Aug 2014 09:30 AM
அதிமுகவுக்கு எதிரான பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டியதால்தான் மைத்ரேயனின் பதவிகள் பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த வர் டாக்டர் வா.மைத்ரேயன். பாஜக வில் இருந்து அதிமுகவுக்கு வந்த இவர், கட்சியின் மருத்துவ அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். 3 முறை மாநிலங்களவை உறுப்பி னராகவும் ஆக்கப்பட்டார். நாடாளு மன்றக் குழு துணைத் தலைவர், மாநிலங்களவை குழுத் தலைவர் பதவிகளையும் வகித்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவ அணித் தலைவர், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர், மாநிலங் களவை குழுத் தலைவர் ஆகிய 3 பதவிகளில் இருந்தும் மைத் ரேயன் திங்கள்கிழமை அதிரடி யாக நீக்கப்பட்டார். பாஜக தலைவர் களுடன் நெருக்கமாக இருந்ததாக வந்த புகாரால்தான் கட்சித் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற நேரத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் மைத்ரேயன்.
அதிமுகவில் இவருக்கு மருத்துவ அணித் தலைவர் பதவி தந்ததுடன், மாநிலங் களவை உறுப்பினராகவும் ஆக்கினார் முதல்வர் ஜெயலலிதா. தென்சென்னை கட்சிப் பணிகளை பார்க்கும் பொறுப்பும் கூடுதலாக இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், கடந்த 6 மாதங்க ளாக இவர் மீது கட்சித் தலை மைக்கு தொடர்ந்து புகார்கள் வரத் தொடங்கின. நாடாளுமன்றத் தேர்தலின்போது தென்சென்னை தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு சீட் அளிக்கப்பட்டதால் அதிருப்தி யில் இருந்தார். தேர்தல் பிரச்சாரத் தின்போது வேட்பாளருடன் சரியாக ஒத்துழைக்க வில்லை என்ற புகாரும் கட்சித் தலைமைக்கு சென்றது. அதன்பிறகு, மைத்ரேயன் மீதான கண்காணிப்பை கட்சித் தலைமை தொடங்கியது.
மேயர் சைதை துரைசாமிக்கும் மைத்ரேயனுக்கும் அடிக்கடி மோதல்கள் நடந்தன. துரைசாமி யின் ஆதரவாளர்களும் மைத்ரே யன் மீது ஏகப்பட்ட புகார் பட்டியல் களை தலைமைக்கு அனுப்பினர். தொகுதி நிதியை செலவழிப்பதில் நடந்த சில விஷயங்கள் மற்றும் சமீபத்தில் பெசன்ட் நகரில் பல கோடி ரூபாய் மதிப்பில் மைத்ரேயன் கட்டியிருக்கும் பங்களா குறித்து உளவுத்துறையினர் மேலிடத் துக்கு தகவல் அளித்தனர். ஆனா லும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் மேலிடம் பொறுமை யாக இருந்தது.
பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தீவிர வாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் மத்திய அரசிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக சில பாஜக தலைவர்களுடன் மைத்ரேயன் நெருக்கமாக இருக்கிறார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் முதல்வர். குறிப்பாக, அதிமுகவுக்கு எதிரான மனநிலை கொண்ட ஒருவருக்கும் இவருக்குமான தொடர்புகளை உளவுத்துறை மூலம் முதல்வர் தெரிந்துகொண்டார்.
பெங்களூரு வழக்கையும் இதையும் முடிச்சுப்போட்டு சில சட்ட சூத்திரங்களை சீனியர் ஒருவர் முதல்வருக்கு தெரிவித்தார். அப்போதே மைத்ரேயனை கட்டம் கட்ட தலைமை முடிவு செய்திருந்தது.
இந்த நேரத்தில் தான் தம்பிதுரை துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டதும் முதல்வரின் பெயரை குறிப்பிட்டு கிண்டலாக சில வார்த்தைகளை மைத்ரேயன் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த தலைமை, மைத்ரேயனிடம் இருந்து மொத்த பொறுப்புகளையும் பறித்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதவி பறிப்பு குறித்து மைத்ரேயனிடம் கேட்டபோது, ‘‘அம்மா கொடுத்த பதவி இது. அவரே எடுத்துக் கொண்டார். இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?’’ என்றார்.
‘பாஜக தலைவர்களுடன் நீங்கள் காட்டிய நெருக்கம்தான் பதவி பறிப்புக்கு காரணம் என கூறப்படுகிறதே’ என்று கேட்டதற்கு, ‘‘அதெல்லாம் தவறான தகவல். இதற்குமேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்று முடித்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT