Published : 05 Jan 2024 04:48 PM
Last Updated : 05 Jan 2024 04:48 PM
திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழிபோல காணப்படுகின்றன. இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கு நாள்தோறும் சராசரியாக 1,200 பேருந்துகளும், விடுமுறை, பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் விடும்போது 1,350 பேருந்துகளும் வந்து செல்கின்றன. இவற்றில் பயணிக்க பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. தஞ்சாவூர் வழித்தட பேருந்துகள் நிற்கும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது. மேலும், ஆங்காங்கே பள்ளம் தோண்டியது போல ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழிபோல சாலைகள் காணப்படுகின்றன.
இதில் பேருந்துகள் செல்லும்போது தூசி பறந்து கண்களை மறைப்பதால், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். பயணிகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல தட்டுத்தடுமாறி சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இலவச கழிப்பறைகள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை, மதுரை, தோகைமலை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 3 கட்டணக் கழிப்பறைகள் ஓரளவுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால், இலவசக் கழிப்பறைகள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி மோசமாக உள்ளன. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் கூறியது: பேருந்து நிலையம் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளன. மிதமான வேகத்தில் பேருந்துகளை இயக்கினால்கூட பேருந்துகளில் உள்ள உதிரிபாகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் பார்த்து பார்த்து பேருந்துகளை இயக்க வேண்டியது உள்ளது. மனநோயாளிகள், உடல்நிலை முடியாத முதியவர்கள், யாசகர்கள் என பேருந்து நிலையம் முழுவதும் சுற்றித்திரிகின்றனர். இவர்களால் பயணிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. இதுதவிர பேருந்து நிலையத்துக்குள் சுற்றிவரும் நாய்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மழை நேரங்களில் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரைகள் ஒழுகுகின்றன. தஞ்சாவூர்-திண்டுக்கல் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் கடைக்காரர்கள் குப்பையை கொட்டி வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலைகளைப் போலவே கழிப்பறைகளும் மிக மோசமாக உள்ளன. பெண்களுக்கான இலவச கழிப்பறை வாசலிலேயே ஆண்கள் சிறுநீர் கழிப்பதால் பெண்கள் அங்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படலாம் என்பதால், மத்திய பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதுபோல தெரிகிறது. எனவே, பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும். உடனடியாக சாலைகளை ஒட்டுப்போடும் (பேட்ஜ் ஒர்க்) பணிகளையாவது செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: தஞ்சாவூர் வழித்தட பேருந்துகள் நிற்கும் பகுதியில் ஒரேநேரத்தில் 38 பேர் பயன்படுத்தும் வகையில் இரண்டு ஆண்கள் சிறுநீர் கழிப்பறைகள், 15 பேர் பயன்படுத்தும் பெண்கள் கழிப்பறை, கரூர், சேலம் வழித்தட பேருந்துகள் நிற்கும் பகுதியில் 8 பேர் பயன்படுத்தும் பெண்கள் கழிப்பறை, 29 பேர் பயன்படுத்தும் ஆண்கள் சிறுநீர் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தவிர அப்பகுதியில் நம்ம டாய்லட் உள்ளது. சென்னை பேருந்துகள் நுழையும் பகுதியில் புதிதாக ரூ.51 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இவைவிரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. சாலைகளை சீரமைக்கவும், பேருந்து நிலைய பராமரிப்புக்காகவும் தலா ரூ.50 லட்சம் செலவில் இரண்டு பிரிவுகளாக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT