Last Updated : 05 Jan, 2024 03:25 PM

2  

Published : 05 Jan 2024 03:25 PM
Last Updated : 05 Jan 2024 03:25 PM

அபராதம் விதித்தாலும் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல் @ கோவை

கோவை: தமிழகத்தில் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட தனிப் பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவிநாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகிய பிற மாவட்டங்களையும், பிற மாநிலத்தையும் இணைக்கும் 6 பிரதான சாலைகளில், பீக் ஹவர்ஸ் மட்டுமின்றி எப்போதும் அதிகளவில் வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

தவிர, பிரதான சாலைகளையும், உட்புறச் சாலைகளையும் இணைக்கும் இணைப்புச் சாலைகள், உட்புறச் சாலைகள் ஆகியவற்றிலும் வாகனப் போக்குவரத்து இருக்கிறது. அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்தால், சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் அதிகரிக்கின்றன. முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், வாகன ஓட்டிகளுக்கு சுய கட்டுப்பாடும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் இருப்பது அவசியம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, அதிக எடையை ஏற்றுவது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையிலான விதிமீறல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக வாகனத் தணிக்கை செய்தும், சிக்னல்களில் பொருத்தப்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், காவலர் மின்னணு கண் என்ற செயலி மூலமும் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிவேகமாக சென்றதாக 630, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக 8, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 1,781, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 8,610, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 5,666, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 35,065, தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 2,91,038, சீட் பெல்ட் அணியாமல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 5,449, இதர விதிமீறல்கள் தொடர்பாக 2,18,773 வழக்குகள் என மொத்தம் 5 லட்சத்து 67 ஆயிரத்து 22 வழக்குகள் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

விதிமீறல்கள் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு மொத்தம் ரூ.9.05 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதுவே, கடந்த 2023-ம் ஆண்டு ரூ.10.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை முற்றிலும் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x