Published : 05 Jan 2024 03:12 PM
Last Updated : 05 Jan 2024 03:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நான்கு பிராந்தியங்களையும் சேர்த்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்களே அதிகம் என தெரியவந்துள்ளது.
புதுவை அரசின் தேர்தல் துறை சார்பில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்தது. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தல் பணிகள் நடந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை புதுவை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி புதுவை மாநில வாக்காளர் திருத்த பணி கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடந்தது. புதுவை மாநிலத்தில் தற்போது 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண், 3ம் பாலினத்தினர் 124 என மொத்தம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்காலில் 76 ஆயிரத்து 932 ஆண், 89 ஆயிரத்து 258 பெண், 3ம் பாலினத்தினர் 24 என மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர்.
மாஹே பிராந்தியத்தில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண் என மொத்தம் 31 ஆயிரத்து 10 வாக்காளர்களும், ஏனாம் பிராந்தியத்தில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் என 39 ஆயிரத்து 355 வாக்காளர்களும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண், 3ம் பாலினத்தினர் 148 என ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தற்போது புதிதாக 36,044 பேர் சேர்க்கப்பட்டனர். 22,309 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 18 முதல் 19 வயது நிரம்பிய வாக்காளர்கள் 26 ஆயிரத்து 959 பேர் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெளியிடப்படும். பொதுமக்கள் பொது விடுமுறை தவிர 7 நாட்கள் இந்த பட்டியலை பார்வையிடலாம். முதல் முறை வாக்காளர்களுக்கும், குடி பெயர்ந்த திருத்தங்களுக்கு விண்ணப்பித்த வாக்காளர்களுக்கும் அவர்களின் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். வாக்காளர்கள் இதில் திருத்தங்கள் செய்ய நேரடியாகவும், ஆன்லைன் மூலவும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT