Published : 04 Jan 2024 03:10 PM
Last Updated : 04 Jan 2024 03:10 PM
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கும் ரயில் நிலையத்தின் பணிகளை வேகப்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பில் ரயில்வேவுக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இன்று 6-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படையான வசதிகளை அதிகாரிகள் தினமும் செய்து வருகின்றனர்.
86 ஏக்கரில் உள்ள இந்தப் பேருந்து நிலையமானது இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திட்டமிடப்பட்ட காலத்தையும், பயன்பாட்டுக்கு வந்த காலத்தையும் பார்த்தால் போக்குவரத்து அதிகமாகியுள்ளதை பார்க்க முடியும்.
பேருந்து நிலையத்தை திட்டமிடும்போது அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு தேவையான அளவுக்கு அனைத்து பணிகளையும் நிறைவேற்றியிருக்க வேண்டும். 2013-ம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 2018-ல் ஒப்பந்தம் கோரப்பட்டு, 2019-ல் பணிகள் துவங்கப்பட்டிருந்தாலும், 30 சதவீத பணிகளே முடிந்திருந்தது. மீதப் பணிகளையும், பல அடிப்படை வசதிகளையும் நாங்கள் உருவாக்கினோம்.
பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் சிறிய பிரச்சினைகள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுவீச்சில் அவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. நேற்று சர்வீஸ் சாலையில் பேருந்து இயக்கப்படுவதால் இரண்டு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தற்காலிகமாக பள்ளிக்கு பின்புறம் இருக்கின்ற ஒருவழியை ஏற்படுத்தி தரவும், பள்ளி செயல்படும் காலை, மாலை வேளைகளில் சர்வீஸ் சாலையில் பேருந்துகளை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாநகர பேருந்துகள் வருகின்ற இடத்தில் இருந்து தொலைதூர பேருந்துகள் இயக்கும் இடம் சற்று தொலைவில் இருப்பதால் கூடுதலாக மூன்று பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு அமையவிருக்கும் பூங்கா பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இங்கு வரவுள்ள காவல்நிலையத்தின் கட்டுமான பணிகள் பொங்கல் முடிவதற்குள் தொடங்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கும் ரயில் நிலையத்தின் பணிகளை வேகப்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பில் ரயில்வேவுக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய பணியை வேகப்படுத்த ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது விபத்து ஏற்பட்டுவிடாமல் இருக்க நடை மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் சென்னை முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் நிலையத்தை மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT