Published : 04 Jan 2024 03:18 PM
Last Updated : 04 Jan 2024 03:18 PM
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கத்தில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்தப்பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் உருவான "மிக்ஜாம்" புயல் கடந்த 4-ம் தேதி சென்னை அருகே நெருங்கி வந்தது. அப்போது பெய்த கனமழையால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
பல இடங்களில் மழை நீர் தேங்கி குளம்போல மாறியது. இந்த பாதிப்பு படிப்படியாக குறைந்து, இயல்பு நிலைக்கு தற்போது திரும்பியுள்ளது. இருப்பினும், மழை வெள்ளத்தால், பல இடங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து, சல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. நுங்கம்பாக்கத்தில் உத்தமர் காந்தி சாலை, சுரங்கப்பாதை சாலை, ஸ்டெர்லிங் சாலை, வீட் கிராப்ட் சாலை உட்பட பல பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
சில இடங்களில் பள்ளங்களை சீரமைத்துள்ளனர். இந்த பணியும் சரியாக இல்லாததால், சாலைகளில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. சென்னை சூளைமேடு பகுதியில் காந்தி சாலை, அண்ணா நெடும்பாதை சாலை, பெரியார் பாதை சாலை, வட அகரம்சாலை, மேத்தாநகர் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு பிரதான சாலை உள்பட பல பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
இந்தப் பகுதியில் முக்கியமான பஜனை கோயில் சாலை, திருவள்ளுவர்புரம் 1-வது, 2-வது தெரு, பாஷா தெரு, பஜனை கோயில் தெருக்கள் உட்பட பல தெருக்களும் குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதுதவிர, சென்னை அண்ணாசாலை அருகே பிளாக்கர்ஸ் சாலை, திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை உட்பட பல சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.
எம்எம்டிஏ காலனி: சூளைமேடு அருகே எம்எம்டிஏ காலனியில் சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி, இங்குள்ள பல சாலைகள், தெருக்களில் வாகனங்களை இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு சவாலாக மாறி வருகிறது.
இதுகுறித்து சென்னை எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த என்.ஷியாம் கூறியதாவது: மழை வெள்ளம் ஓய்ந்து 4 வாரத்தை தாண்டிவிட்டது. இன்னும் பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. கோயம்பேடு 100 அடி சாலையில் இருந்து எம்எம்டிஏ காலனிக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. இதுபோல, எம்எம்டிஏ காலனியில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளன.
எம்எம்டிஏ காலனியில் இருந்து சூளைமேடு பகுதிக்கு செல்லும் சாலை மற்றும் பல தெருக்களில் இதே நிலைதான். இதனால், சாலைகளில் வாகனத்தை இயக்குவது மிகவும் சவாலாக உள்ளது. எனவே, சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் தாமதம்? - இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: ஒரு சாலையின் ஆயுள் காலம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை உள்ளன. மக்கள் பயன்பாடு, மழை பாதிப்பு, மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் பூமியை தோண்டுவதால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றால்,சாலைகள் சேதமடைகின்றன.
தற்போது, மழை வெள்ளத்தால் சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து உள்ளன. இந்த சாலைகளில் குறைவான சேதமுள்ளவற்றை கணக்கெடுத்து, பள்ளங்களை சீரமைக்க வேண்டும். ஆனால், முழுமையாக சீரமைப்பு செய்வதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால், சாலை பள்ளம் சீரமைப்பது தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மழை காலத்துக்கு முன்பே ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தால், மழைக்கு பிறகு சீரமைப்பு பணியை தொடங்குவது எளிதாக இருந்திருக்கும். ஆனால், முன்னதாக ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை. இதனால், பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, சாலைகளில் பள்ளம் காணப்படுகிறது.
இதுபோன்ற காலங்களில் அவசர பணியாக கருதி, சாலைகளை சீரமைக்க முன்வர வேண்டும். இதன்மூலம், சாலைகள் சீரமைப்பின் காலதாமதம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்து, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, சிறிதளவு சேதமடைந்த சாலைகளில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர, முழுவதும் சேதமடைந்த சாலைகளையும் படிப்படியாக சீரமைத்து வருகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT