Published : 04 Jan 2024 03:02 PM
Last Updated : 04 Jan 2024 03:02 PM
புதுச்சேரி: சாகித்ய அகாடயில் இந்திய மொழிகளில் இந்தி மொழி நூல்களுக்கு நிகராக தமிழ் நூல்கள்தான் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை ஆகின்றன என்று சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தெரிவித்தார்.
சாகித்ய அகாடெமி மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் தமிழ் ஒளி நூற்றாண்டுக் கருத்தரங்கம், லாசுப் பேட்டை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று காலை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் பேசியது: "புதுச்சேரி பல்வேறு கவிஞர்களை வாழ்வித்த மண். தமிழ் மொழியின் வாழ்வியல் வளர்ச்சியில் புதுச்சேரி மிக முக்கியப் பங்காற்றி இருக்கின்றது. சாகித்ய அகாடமி தற்போதைய செயலர் டாக்டர் சீனிவாச ராவ் இந்த ஆண்டு 8 படைப்பாளர்களுக்கு நூற்றாண்டு விழா நிகழ்த்துவதற்கு முன்னெடுப்பு செய்தார். இதற்கு நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு படைப்பாளி தொடர்பாகவும் இரண்டு நாள் ஆய்வரங்கம் நிகழ்த்தவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இது முதல் முறையாக நிகழ்கிறது.
சாகித்ய அகாடமியில் இந்திய மொழிகளில் இந்தி மொழி நூல்களுக்கு நிகராக தமிழ் நூல்கள் தான் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை ஆகின்றன. இதற்கு காரணம் சென்னையில் இயங்குகின்ற சாகித்ய அகாடமி நிர்வாக அமைப்பு. தமிழ் ஒளி தம்முடைய கருத்தியல் வளத்தில் மிக அழுத்தமான பதிவுகளை அளித்திருக்கின்றார்" என்று குறிப்பிட்டார்.
கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர் கலிய பெருமாள் நிகழ்வை துவக்கி வைத்து பேசுகையில், "புதுச்சேரியில் சாகித்ய அகாடமி இயங்குவதற்கு என்று தனி ஒரு கட்டட பகுதி அரசு தரப்பில் வழங்க உள்ளோம். மீண்டும் சாகித்ய அகாடமி நூலகம் செயல்படவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சாகித்ய அகாடமி சென்னை அலுவலகப் பொறுப்பாளர் சந்திரசேகர ராஜு வரவேற்புரை ஆற்றினார். பொதுக் குழு உறுப்பினர் பூபதி நோக்க உரையாற்றினார். பேராசிரியர் பஞ்சாங்கம் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர் கங்கா சிறப்புரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT