Published : 04 Jan 2024 01:56 PM
Last Updated : 04 Jan 2024 01:56 PM

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: "பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அதிமுக அரசில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்பட்டு வந்தது.

எனது தலைமையிலான அரசில், கரோனா நோய்த் தொற்றின்போது தமிழக மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 2,500 வழங்கப்பட்டது. மேலும் முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலவர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500 போதாது என்றும், 5,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களில் பேட்டியளித்தார்.

ஆனால், 2022ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பரிசும் வழங்கவில்லை. உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, கலப்பட மிளகு என்று, தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை மட்டும் வழங்கி தமிழக மக்களின் கேலிக்கு உள்ளானார். கடந்த ஆண்டு பொங்கலின்போது, பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, ஏலக்காயுடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் அரசு அறிவித்துள்ளது.

எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000 வழங்க வேண்டும் என்றும்; மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி, சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும்; எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும்; தற்போதைய கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

எனது தலைமையிலான அரசில், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட கரும்பு, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்தது. இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x