Published : 04 Jan 2024 05:10 AM
Last Updated : 04 Jan 2024 05:10 AM
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய ரூ.238.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கம் குறித்து எப்போது அறிவிக்கப்படும் என்று மக்கள் மத்தி யில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் வைப்பதற்கான பச்சரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறைபொங்கலை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்முகாம்களில் வாழும் மக்களுக்கு ரூ.2,356.67 கோடி மதிப்பில், ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 2022 டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2-ம் தேதி தொடங்கி வைத்தார். வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுபோல, ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் இருந்த நிலையில், கடந்த டிசம்பர்3, 4-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம் புயல், தொடர்ந்து 17, 18-ம்தேதிகளில் தென் மாவட்டங்களை மூழ்கடித்த வெள்ளம் ஆகியவற்றுக்கான நிவாரணம் வழங்கும் பணிகளால் பொங்கல் தொகுப்புக்கான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.
இதற்கிடையே, ரொக்கப் பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம்:
கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பச்சரிசியை பொருத்தவரை, ஒரு கிலோ ரூ.35.20 என்ற விலையில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.77.29 கோடி செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒருகிலோ சர்க்கரை ரூ.40.61-க்கு கொள்முதல் செய்ய ரூ.89.18 கோடி, போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி உட்பட முழு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.72.46 கோடி என மொத்தம் ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் பணிகள் தீவிரம்: இதையடுத்து, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பச்சரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திடம் இருந்துசர்க்கரை கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாத விலையில் கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை மூலம் முழு கரும்பு கொள்முதல் செய்ய கடந்த ஆண்டுபோல, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அல்லது மண்டல மேலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைத்து அந்தந்த மாவட்ட அளவில் முழு கரும்பு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு இல்லை. இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2022 பொங்கல் பண்டிகையின்போது ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மளிகைபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. அவற்றின் தரம் குறித்து விமர்சனம் எழுந்ததால், அடுத்த ஆண்டில், பொருட்களுக்கு பதிலாக மீண்டும் ரூ.1,000 ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரொக்கப் பரிசு ரூ.1000 வழங்குவது குறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், சில நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை விநியோகித்து, அடுத்த வாரத்தில் தொகுப்பை வழங்கும் நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ரூ.1,000 ரொக்கம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்’’ என்றார்.
கடந்த முறை, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு தொடங்கப்பட்ட மகளிர் உரிமை தொகை திட்டத்தில், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்,கார் வைத்திருப்போர் என பல்வேறுவரையறையின்கீழ் தகுதியான பயனாளிகளுக்கே மட்டுமே மாதம் ரூ.1,000வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT