Published : 04 Jan 2024 05:05 AM
Last Updated : 04 Jan 2024 05:05 AM
சேலம்: இந்திய அளவில் லாரி ஓட்டுநர்களின் மத்தியில் அதிர்வை ஏற்படுத்திய ‘ஹிட் அண்டு ரன்’ குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தினால், இருசக்கர வாகனஓட்டிகள் முதல் லாரி ஓட்டுநர்கள் வரையிலான அனைத்துத் தரப்பும் பாதிப்புக்கு உள்ளாவதுடன், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டமான`பாரதிய நியாய சன்ஹிதா'வில் `ஹிட் அண்டு ரன் (Hit-And-Run)'பிரிவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான போராட்ட அறிவிப்பையடுத்து, மத்திய அரசு ‘ஹிட் அண்டு ரன்’ மசோதவை அமல்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளித்தது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் கூறியதாவது: `ஹிட் அண்டு ரன்' சட்டப் பிரிவால் ஒட்டுமொத்தமாக ஓட்டுநர்களும் பாதிக்கப்படுவர். பழைய குற்றவியல் சட்டத்தில், விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தால், ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி ஓட்டுநருக்கு அபராதத்துடன், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.
மேலும், குற்றவாளி தப்பினாலோ அல்லது சம்பவம் குறித்துஉடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தவறினாலோ 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த சட்டம் இருசக்கர வாகனம், கார் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும்.
பிற மாநிலங்களில் சாலை விபத்து நேரிடும்பட்சத்தில், லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே,அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இருக்கும். விபத்தை ஏற்படுத்திய இடத்தில் உள்ள ஓட்டுநர்களை பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கி, ரத்த காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.
லாரி ஓட்டுநர்களைத் தாக்கும்கும்பல் மீது எந்த நடவடிக்கையையும் காவல் துறை எடுப்பதில்லை. எனவே, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்கவும், சட்டத்தைக் கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.
விபத்தை ஏற்படுத்திய லாரிகளை போலீஸார் கைப்பற்றி, காவல் நிலையத்துக்கு கொண்டு செல்வது நடைமுறையாகும். விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், காவல் நிலையத்தில் இருந்து அதை மீட்டெடுக்க நிறைய செலவிட வேண்டும்.
பழைய குற்றவியல் சட்டத்திலேயே இதுபோன்ற சூழலை சந்திக்கும் லாரி உரிமையாளர்கள், புதிய சட்டத் திருத்தத்தை அமல்படுத்தினால், சம்பவ இடத்தில் லாரி ஓட்டுநர் இருந்தாலும் ‘ஹிட் அண்டு ரன்’ வழக்கு பதிவு செய்து, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அவரிடமிருந்து கூடுதல் பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளது.
எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்துக்காக லாரி ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். எனவேதான், நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது, லாரி ஓட்டுநர்கள் நிம்மதியாக வாகனங்களை இயக்க வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT