Published : 04 Jan 2024 12:05 AM
Last Updated : 04 Jan 2024 12:05 AM
கூடலூர்: குமுளியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சிப்ஸ் விற்பனை 24 மணி நேரமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. தமிழக கேரள சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தில் அதிகம் கடந்து சென்று வருகின்றனர். மேலும் சபரிமலையின் பிரதான சாலையாகவும் இது உள்ளது. இதனால் குமுளியில் சுற்றுலா சார்ந்த வர்த்தகமும், நேந்திரம் சிப்ஸ், ஏலக்காய், மிளகு, தேங்காய் எண்ணெய், காபி, தேயிலை, சாக்லேட் உள்ளிட்ட விற்பனையும் அதிகளவில் நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் கடந்த நவ.16-ம் தேதி தொடங்கியதில் இருந்து குமுளியில் வர்த்தகம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
ஐயப்ப பக்தர்களைப் பொறுத்தளவில் ஊர் திரும்புகையில் சிப்ஸ் போன்றவற்றை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சிப்ஸ் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மகரவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் வருகை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஏராளமான வாகனங்கள் இங்கு நிறுத்தப்பட்டு பக்தர்கள் சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வருகின்றனர். நெரிசல் ஏற்படவே தற்போது குமுளிக்கு அருகில் குளத்துப்பாலம், கொல்லம்பட்டரை, கேரள அரசுப் பேருந்து பணிமனை போன்ற இடங்களில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு சிறு வர்த்தகமும் குமுளியில் களைகட்டி வருகின்றன. இதுகுறித்து சிப்ஸ் கடை உரிமையாளர் சுல்தான் கூறுகையில், தேங்காய் எண்ணெயில் தயாரித்த நேந்திரம் சிப்ஸ் ரூ.280-க்கும், பாமாயிலில் தயாரானது ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரவும், பகலும் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவதால் கடைகளின் எண்ணிக்கையும் வெகுவாய் உயர்ந்து விட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT