Published : 03 Jan 2024 03:52 PM
Last Updated : 03 Jan 2024 03:52 PM

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.3) அவர் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கு.க.செல்வத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி மற்றும் முன்னாள் திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கு.க.செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கிப் பழகியவர். ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தவர், திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மீண்டும் திமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்ட நிலையில், உடல்நலக் குறைவால் மறைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x