Published : 03 Jan 2024 10:57 AM
Last Updated : 03 Jan 2024 10:57 AM

“ஆதார் இணைப்பு கட்டாயத்தால் நூறு நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம் சீர்குலையும்” - வைகோ கண்டனம்

சென்னை: “ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்திலும், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. 2023 பிப்ரவரி 1ம் தேதி முதல் நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகள் சம்பளம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. நூறு நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்காக வங்கியில் உரிய படிவத்தைப் பெற்று, பூர்த்திசெய்து வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல், ஊதியம் பெறுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2023 டிசம்பர் 31-க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சம்பளம் வழங்கப்படாது என்று ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் நூறு நாள் வேலைத் திட்ட அட்டை பெற்றுள்ள 35 சதவீதம்பேர் ஊதியம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆதார் மற்றும் நூறுநாள் வேலை அட்டை இணைப்பு குளறுபடிகளால் இந்தியா முழுவதும் கடந்த 21 மாதங்களில் சுமார் 7.6 கோடி ஏழை, எளிய மக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்பு உறுதி திட்டப் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என ஒரு நிறுவனம் (Lib Tech India) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டையில், பெயரில் பிழை இருந்தாலும் வங்கிக் கணக்கில் உரியவருக்கு பணம் போய் சேராது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை பெற்றவர்களில், 28 சதவீதத்தினர் பட்டியல் சமுதாயத்தினர்; 1.47 சதவீதத்தினர் பழங்குடியினர். இதையும் கடந்து பணி செய்பவர்களில் 87 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். வேலை உறுதித் திட்டத்தின்படி வழங்கப்படும் வேலைக்காக தரப்படும் ஊதியம்தான் இலட்சக்கணக்கான குடும்பங்களின் பசியைப் போக்குகிறது. தமிழ்நாட்டில் 66.66 லட்சம் குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புப் பெறுகின்றன. இது தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், இத்திட்டத்தை நிறுத்திவிடும் முயற்சியாக, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது. 2022-2023 நிதியாண்டில் ரூ. 89 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ. 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியது. 2023 -2024 பட்ஜெட்டில் இதையும் குறைத்து, வெறும் ரூ. 60 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜக அரசு ஒதுக்கியது. இது, முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதமும், எதிர்பார்க்கப்பட்ட ரூ. 89 ஆயிரம் கோடியை விட 33 சதவீதமும் குறைவாகும்.

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையான ரூ. 2 ஆயிரத்து 696 கோடியே 77 லட்சத்தை வழங்காமல் ஒன்றிய அரசு அலைகழித்து வருகிறது. இந்நிலையில் ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை படிப்படியாக சிதைத்து வரும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியது. ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x