Published : 03 Jan 2024 05:12 AM
Last Updated : 03 Jan 2024 05:12 AM
சென்னை: வடசென்னை, அரியலூர் துணை மின் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அனல், நீர் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல்வேறு திறன்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு உயரழுத்தம் குறைக்கப்படுகிறது. தற்போது மின்வாரியத்துக்கு அதிகபட்சமாக 400 கிலோவோல்ட் திறனில்தான் துணை மின் நிலையங்கள் உள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. எனவே, மாநிலம் முழுவதும் அதிக மின்சாரத்தை எடுத்துச் சென்று விநியோகிக்க வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்திலும், கள்ளக்குறிச்சி, அரியலூர், விருதுநகர், கோவையிலும் தலா 765 கிலோவோல்ட் திறனில் தலா ஒரு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை இணைக்க, அதே திறன் உடைய மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
வடசென்னை, அரியலூர் துணை மின் நிலையங்களும், அவற்றை இணைக்கும் 270 கி.மீ. மின்வழித்தட பணிகளும் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. ரூ.4,640 கோடி மதிப்பிலான இப்பணியை 2019-20-ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் முடியவில்லை.
மின் வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, 2 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில், பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள 765 கிலோவோல்ட் திறன் துணை மின் நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்து, செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சார்ஜிங் பணி தொடங்கப்பட்டுள்ளது. வடசென்னை துணை மின் நிலையத்தில் இறுதிகட்ட சோதனைகள் நடந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் சார்ஜிங் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
வடசென்னை - அரியலூர் 765 கிலோவோல்ட் வழித்தடம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் திறன் உடையது. சென்னை அடுத்த அத்திப்பட்டில் 800 மெகாவாட் திறனில் அமைக்கப்படும் வடசென்னை-3 அனல் மின் நிலையத்தில் அடுத்த மாதம் முதல் உற்பத்தியாக உள்ள மின்சாரம் இந்த வழித்தடத்தில் எடுத்துச் செல்லப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT