Published : 03 Jan 2024 05:11 AM
Last Updated : 03 Jan 2024 05:11 AM
மதுரை: மகாத்மா காந்தியின் கருத்துகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.
பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் எழுதிய `தாத்தா தந்த கண்ணாடி' என்ற நூல் வெளியீட்டு விழாமதுரையில் நேற்று நடைபெற்றது.நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் நாலை வெளியிட, முதல்பிரதியை வேலம்மாள் கல்விகுழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் இல.கணேசன் பேசியதாவது:
நான் ஒரு ஆர்எஸ்எஸ் சேவகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர சேவகனாக இருந்துள்ளேன்.
ஆளுநராவதற்கு முன் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தியை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டினார். அப்படிச் சொல்ல வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, காந்தியைஅவமானப்படுத்த வேண்டாம்என்று அவரைக் கேட்டுக்கொண்டேன்.
அந்த நேரத்தில் நான் சார்ந்த இயக்கம் (பாஜக) வளர்ந்து, ஆட்சிக்கும் வந்துவிட்டது. `காந்தியை கொன்றவர்கள் என்று பாஜகவினரைக் கூறினால், காந்தியைக் கொன்றவர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவாக மாறி வருகிறார்கள் என்று அரசியல் நோக்கர்களும், குறிப்பாக வெளிநாட்டினரும் கருதி, பாரத நாடு காந்தியைக் கொன்றது சரி என்று கருதுகிறது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இதனால் யாருக்கு அவமானம்?' என்று அவரிடம் தெரிவித்தேன்.
காந்தியின் கருத்தை உண்மையாக ஏற்றுக்கொண்டு, அதை நிறைவேற்றப் பாடுபடுகிறது என்று மக்கள் கருதுவதால்தான், அந்த இயக்கம் மக்களின் பேராதரவைப் பெற்று வளர்ந்து வருகிறது. மகாத்மா காந்தியின் கருத்துகள் நிரந்தரமானவை. அவரை பல பேர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், காந்தியின் கருத்தைப் பின்பற்றுபவர்கள் சிலர், அவர்கள் பின்பற்றும் கருத்துகளுக்கு ஏற்ப காந்தியின் கருத்துகளை மாற்றிக் கெள்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வாறு இல.கணேசன் பேசினார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் பிரபாகர், மருத்துவர் புகழகிரி, பேராசிரியர்கள் ஆண்டியப்பன், எஸ்.சுப்பிரமணியபிள்ளை, முன்னாள் எம்.பி. சித்தன், எம்.எஸ்.ஷா, பாஜக மாவட்டத் தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிக்குமார், ராஜசிம்மன், முன்னாள் மாவட்டத் தலைவர் சசிராமன், பொதுச் செயலாளர் ராஜ்குமார், வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் அய்யப்பராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மடீட்சியா முன்னாள் தலைவர் மணிமாறன் வரவேற்றார். மருத்துவர் ராம சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT