Published : 02 Jan 2024 09:23 PM
Last Updated : 02 Jan 2024 09:23 PM
திருச்சி: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தென்மண்டல கட்டளை விசாரணை முனைவர் ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சாமிகள், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் ‘சிவபோக சாரம் காட்டும் குருவருள் அனுபவம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கரங்களால் ஆய்வுப் பட்டம் பெற்ற ஸ்ரீமத் திருஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியது: "இவ்விழாவில் பங்கு பெறும் வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. தருமபுரம் ஆதீனத்தில் தற்போதுள்ள ஆதீனம், கட்டளை சாமிகளாக இருந்து முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்றார். அவரைத் தொடர்ந்து தற்போது நான் 2-வது முனைவர் பட்டம் பெற்றுள்ளது பெரும் பேராக கருதுகிறேன்.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் பி.காம்., படித்தேன். எம்.ஏ., எம்.பி., பி.எச்டி., மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் படித்தேன். அந்தக்கல்லூரியில் படித்து அந்த கல்லூரியிலேயே கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தற்போதுள்ள குருமகா சன்னிதானம், என்னை கல்விக்குழு உறுப்பினராக என்னை நியமித்துள்ளார். புத்தாண்டில் ஆளுநர், முதல்வர் முன்னிலையில் நாட்டின் பிரதமரிடம் பட்டம் பெற்றது மகிழ்ச்சியான தருணம்.
கல்லூரிக்கும், மடத்துக்கும், எனக்கும் பெருமை. தருமபுரம் ஆதீனத்தில் ஆன்மிகப்பணி மட்டுமின்றி மக்கள் பணியும் சிறப்பாக செய்யப்படுகிறது. முனைவர் பட்டம் பெறுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டார். கல்வி அவசியம். அனைவரும் படிக்க வேண்டும். படிப்புக்கு எல்லை என்பது இல்லை. செல்வம் கொடுக்கக்கொடுக்க தேயும். கல்வி ஒன்று தான் கொடுக்கக்கொடுக்க வளரும். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நிலையான மேலாண்மை பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முதுகலை (எம்.எஸ்.சி.,) மாணவர் பி.எஸ்.அகில், பிரதமர் கரங்களால் பட்டம் பெற்றது குறித்து கூறியது: "ஆளுநர், முதல்வர் முன்னிலையில் பிரதமரிடம் பட்டம் பெற்றது பெருமையாக கருதுகிறேன். பிரதமர் வாழ்த்து தெரிவித்து எனக்கு பட்டம் வழங்கினார். கடந்த சில நாட்களாக பாதுகாப்புக் காரணங்களால் பல்வேறு கெடுபிடிகள் இருந்தாலும், பிரதமர் கரங்களால் பட்டம் பெற்றபின் அவை பெரிதாக தெரியவில்லை. ஆசிரியர்கள், பதிவாளர், துணைவேந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT