Published : 02 Jan 2024 08:21 PM
Last Updated : 02 Jan 2024 08:21 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீதான நடவடிக்கைகள் என்னென்ன? - அரசு விளக்கம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள் நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி. சரத்கர், ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:-

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூபாய் 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
  • காவல் துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூபாய் 93 லட்சம் வழங்கப்பட்டது. மேற்காணும் நிகழ்வு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
  • இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பரத்ராஜ் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாயாருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது.
  • போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்ட 38 வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் “தடையில்லாச் சான்றிதழ்’’ வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல் துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி. சரத்கர், ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், இரு இரண்டாம் நிலைக் காவலர், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேஷ் குமார் யாதவுக்கு பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது. அவர் வகித்து வரும் பதவியிலேயே அவர் தொடர்ந்து பணியாற்றி வருவார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x