Published : 02 Jan 2024 07:17 PM
Last Updated : 02 Jan 2024 07:17 PM

முதல்வர் பேசும்போது எழுந்த “மோடி” கோஷம் - பிரதமரின் திருச்சி நிகழ்வுகள் ஹைலைட்ஸ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேறப்பு அளிக்கப்பட்டது.

திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார். இந்த நிகழ்வுகளில் கவனம் ஈர்த்த தருணங்கள் - முக்கியத் தகவல்களின் தொகுப்பு...

> டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி திருச்சி வந்தார் அவரை ஆளுநர் ஆர். என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்பட 41 பேர் கலந்துகொண்டனர்.

> விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்" ஆங்கிலப் பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார்.

> பிரதமர் மோடி திருச்சி வருகை காரணமாக திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருச்சி விமான நிலைய வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட னர்.

> திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை சாலையிலும் சுமார் 4,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

> திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும், ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் 2 காவல் துறை தலைவர்கள், 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 8 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி மற்றும் பிறமாவட்டங்களிலிருந்து 18 வெடி குண்டு கண்டறியும் பிரிவினர், மோப்ப நாய் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

> திருச்சி செம்பட்டு பகுதியிலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள சாலையில் தற்காலிகமாக 100 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. சத்தியமங்கலத்திலிருந்து வனப்பகுதி சிறப்பு பணிக் குழு வரவழைக்கப்பட்டு பல்கலைகழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

> திருச்சி மாநகரத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள அனைத்து விடுதிகள், மேன்சன்கள் தனிப்படையினர் மூலம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு கண்காணித்ததுடன், உயரமான கட்டிடங்களில் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

> சென்னை,கோவை, சேலம் மற்றும் திருச்சியிலிருந்து சுப்பிரமணியபுரம், விமான நிலையம், மாத்தூர் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் காலை 8 முதல் பிற்பகல் மணி வரை மாற்று வழியில் இயக்கப்பட்டன.

> மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர், புறவழிச்சாலை சந்திப்பு, விராலிமலை, இலுப்பூர் வழியாக வாகனங்கள் புதுக்கோட்டை சென்றன . எதிர் திசையில் திருச்சி வந்த வாகனங்கள் கட்டியாவயல், இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம் வழியாக திருச்சிக்கு வந்தன. ஆனால், கல்லூரி வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. கனரக வாகனங்கள் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை அனுமதி வழங்கப்படவில்லை.

> பிரதமரை வரவேற்க பாரதிதாசன் பல்கலைகழகத்துக்கு செல்லும் பாஜக தொண்டர்களின் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

> பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை காரில் பயணித்தார். விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கைகளை அசைத்து கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தி சென்றார்.

> திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்தார்.

> பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார்.

> தங்கபதக்கம் பெற்ற சுமார் 100 மாணவ, மாணவிகள் ஒரு அரங்கத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் முன் வரிசையில் பிரதமர் மோடி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

> அம்மாணவர்கள் அருகே சென்று பிரதமர் பேசினார். அப்போது அவர் ‘டெல்லிக்கு வர விருப்பமா?’ என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு சிலர் விருப்பம் தெரிவித்து கைகளை உயர்த்திக் காட்டினர். பலர் சிரித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

> அதே அரங்கில் மற்றொரு புறம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பட்டமளிப்பு விழா உடையுடன் இருந்தனர் அவர்களுடன் பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் பட்டமளிப்பு விழாவுக்கான அங்கியை அணிந்து 10.45 மணிக்கு பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா அரங்கத்துக்கு வந்தார்.

> விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக ஆறு முகங்களைக் கொண்ட மயிலேறிய முருகன் ஐம்பொன் சிலையை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழங்கினார்.

> பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில் தங்கம் பதக்கம் பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்

> பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டு 145 இணைவுபெற்ற கல்லூரிகளும் 12 ஆய்வு நிறுவனங்களும் என மொத்தம் 157 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளில் கலை அறிவியல் பாடங்களில் படித்த இளநிலை, முதுநிலை, ஆய்வு நிறைஞர், முனைவர் உள்ளிட்ட 2லட்சத்து 82 ஆயிரத்து 567 மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்படுகிறது.

> திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிலையில் அந்தப் பல்கலைக்கழகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட பொங்கல் உள்ளிட்ட காலை உணவு கெட்டுப் போய் இருந்ததாகவும், இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

> பின்னர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காக, அங்கிருந்து 11.45 மணிக்கு காரில் புறப்பட்டார்.

> விமான நிலையத்தில் நடந்த விழாவில், விமான போக்குவரத் துறை, ரயில்வே தேசிய நெடுஞ்சாலைத் துறை, துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அணுசக்தி துறை மற்றும் உயல் கல்வி துறை உள்பட 7 துறைகளில் ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

> இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியை வழங்குவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அந்த அரங்கத்தில், கூடியிருந்த பாஜகவினர் “மோடி,மோடி” என்று தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர். அப்போது பிரதமர், அவர்களை அமைதியாக இருக்கும்படி கைகளை காட்டினார்.

> விமான நிலையத்தில் நடைபெற்ற முனையம் திறப்பு விழாவுக்கு வந்த பொதுமக்களும், பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் உரிய அனுமதிச் சீட்டை காட்டிய பிறகே நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

> 'தமிழ் பண்பாட்டை பற்றி நான் பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது" என்று திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். | முழுமையாக வாசிக்க > “இக்கட்டான சூழல்களில் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது மத்திய அரசு” - பிரதமர் மோடி பேச்சு @ திருச்சி

> கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழக மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டட திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். | அதன் விவரம் > ‘இயற்கை பேரிடர்’ என அறிவித்து உரிய நிதி வழங்குக: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை @ திருச்சி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x