Last Updated : 02 Jan, 2024 06:26 PM

 

Published : 02 Jan 2024 06:26 PM
Last Updated : 02 Jan 2024 06:26 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பரிசுப் பொருட்கள் வசூல் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க கோரிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்.

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்றும், விழாவுக்கான பரிசுப் பொருட்கள் வசூல் விவரங்களை மாவட்ட நிர்வாக்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ''உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் கடந்த சில ஆண்டாகவே ஊழல், முறைகேடு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நடந்தபோதிலும், தற்போது முறைகேடு அதிகரித்துள்ளது.

2 ஆண்டுக்கு முன் சிறந்த வீரர்களுக்கு தங்கக் காசு வழங்குவதில் தவறு நடந்தது. கடந்த ஆண்டு கண்ணன் என்பவர் 33 எண் கொண்ட டீ சர்ட்டை மாற்றி அணிந்து வந்து முதல் பரிசு பெற முயன்றது கடைசி நேரத்தில் தெரிந்தது. இத்தகைய முறைகேடுகளை தடுக்கவேண்டும்.

வாடிவாசலில் வீரர்களுக்கான ஆலோசனைகளை வழங்கவேண்டும். காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக போதிய இடைவெளியில் அவிழ்க்கவும், ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஆனாலும், விழாக் குழுவினர் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்கின்றனர். காயமடைந்த வீரர்களை காப்பாற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

காயமடைவோர் மீட்பதற்குள் மாடுகள் அவிழ்க்கப்பது தவிர்க்கவேண்டும். விழா குழுவினர் காளை உரிமையாளர்களின் சாதிப் பெயர்களை ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கக் கூடாது. காயடைந்து மீட்கப்படும் வீரர்களுக்கு தொற்று நோய்க் கிருமி பரவாமல் தவிர்க்க, தனி அறை அமைத்து முதலுதவி சிகிச்சையளிக்க வேண்டும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினரும், தென்மண்டல ஐஜி தலைமையில் ஏராளமான காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் அரசு ஊதியம் வழங்கிறது. ஆனால், விழா குழுவினர் நன்கொடை என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசு, பரிசுப் பொருட்கள், ரொக்க பணம் என வசூல் செய்கின்றனர். இவர்களிடம் எவ்வித கணக்கு விவரம் மாவட்ட நிர்வாகம் கேட்பதில்லை.

ஊர் பொதுமக்கள் சார்பில், நடத்தும் கோயில் விழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாருக்கான ஊதியம், அலவென்சை கருவூலம் மூலம் செலுத்தும் சூழலில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் காவல் துறையினர், அரசு ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்குவது நியாயமாகாது. விழாக் குழுவினரே வரவு, செலவு கணக்குகளை கையாளுவதால் மோசடி, முறைகேடுகளும் நடக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு பரிசுப் பொருட்கள் வசூல் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் விழாக் குழுவினர் ஒப்படைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x