Published : 02 Jan 2024 03:47 PM
Last Updated : 02 Jan 2024 03:47 PM

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் | கோப்புப்படம்

சென்னை: சேலத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொ) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலை. கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கடந்த செப். 9-ம் தேதி கோவை நிறுவனப் பதிவாளர் அலுவலகத்தில் `பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் (PUTER FOUNDATION)' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் அதன் இயக்குநர்களாகவும் இருந்து, தலா ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளனர். பெரியார் பல்கலை. வளாகத்தில் இந்த நிறுவனத்துக்கான கட்டிடத்தை ஆட்சிமன்றக் குழு மற்றும் அரசு அனுமதியின்றி கட்டியுள்ளனர். மேலும், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ஊழல் செய்ததாக பெரியார் பல்கலை.தொழிலாளர் சங்க கவுரவத் தலைவரும், சட்ட ஆலோசகருமான இளங்கோவன் (74), கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நால்வர் மீதும், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் , "வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறிய மாஜிஸ்திரேட், போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது" என வாதிட்டார்.

அப்போது துணைவேந்தர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், "புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை. புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. இந்த பொய் புகார், உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை. எனவே, இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தீவிரமான இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, துணைவேந்தர் தரப்பு, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களைக் கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது. எனவே, வரும் ஜனவரி 12-ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு துணைவேந்தர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x