Published : 02 Jan 2024 12:45 PM
Last Updated : 02 Jan 2024 12:45 PM
சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக் கால பிணையில் வந்துள்ள அதன் துணை வேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.
முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த ராதா கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் விவகாரத்தில் மட்டும் அவருக்கு தனிச் சலுகை காட்டப்படுவது வியப்பளிக்கிறது.
மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்கான துணை வேந்தர் போன்ற உயர் பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ள பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை வேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT