Published : 02 Jan 2024 08:05 AM
Last Updated : 02 Jan 2024 08:05 AM

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: பாதுகாப்பு பணிக்காக 7 ஆயிரம் போலீஸார் குவிப்பு

திருச்சி: திருச்சியில் இன்று (ஜன.2) நடைபெறும் சர்வதேச விமானநிலைய புதிய முனையம் திறப்பு மற்றும் பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வர உள்ளதால் திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10மணிக்கு திருச்சி விமானநிலையம் வரும் பிரதமர், காலை 10.30 மணிக்கு பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராகப் பங்கேற்கிறார்.

பின்னர், சர்வதேச விமானநிலைய புதிய முனையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தும் சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவிலும் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையம்,பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மட்டும் 3 ஐ.ஜி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரதமரை வரவேற்று பாஜக சார்பில் விமானநிலையம் பகுதி, திருச்சி -புதுக்கோட்டை சாலை வழிநெடுகிலும் கட்சிக் கொடிகள், தோரணங்கள் மற்றும்அலங்கார நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 இடங்களில் வரவேற்பு அளிக்கவும் பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேபோல, இன்று காலை 9.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். நகர ம்முழுவதும் கட்சிக் கொடிகளை கட்டி, வரவேற்பு பேனர்களை அமைத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மையத் தடுப்புகளில் வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், அவற்றில் பூச்செடிகள் வைக்கப்பட்டு, புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பிரதமருடன் ஓபிஎஸ் சந்திப்பு? விழா முடிந்த பிறகு பிரதமர்தலைமையில், திருச்சி விமானநிலைய புதிய முனைய விஐபி அறையில், பாஜக மாநிலக் குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, அதிமுகவில் இருந்துநீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை பிரதமர் சந்திப்பார் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x