Published : 02 Jan 2024 04:06 AM
Last Updated : 02 Jan 2024 04:06 AM

அம்ரித் பாரத் விரைவு ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் விரைவு ரயிலை எம்.பி. அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை: அம்ரித் பாரத் விரைவு ரயிலை ஜோலார்பேட்டையில் வரவேற்கும் நிகழ்ச்சியில், திமுக – பாஜக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அயோத்தியில் கடந்த 30-ம் தேதி அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2 விரைவு ரயில்களை பிரதமர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அதில் ஒரு அம்ரித் பாரத் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்டு 5 மாநிலங்கள் வழியாக செல்லும் வகையிலும், மற்றொறு அம்ரித் பாரத் விரைவு ரயிலானது, மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கி, ஒடிசா ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்கள் வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் கடந்த 30-ம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரயிலில் பயண நேரம் 42 மணி நேரமாகும். இதில் உள்ள 8 பெட்டிகள் உட்காரும் வசதி கொண்டதாகவும், 12 பெட்டிகள் படுக்கை வசதி கொண்டதாகவும் அமைக்கப் பட்டுள்ளன. அம்ரித் பாரத் விரைவு ரயில் 110 கிலோ மீட்டர் இருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். அம்ரித் பாரத் விரைவு ரயில் மால்டாவால் பகுதியில் இருந்து பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை சுமார் 2,247 கிலோ மீட்டர் பயணிக்கிறது.

இந்நிலையில், அம்ரித் பாரத் விரைவு ரயில் நேற்று மாலை 5.34 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்தது. அப்போது, இதனை வரவேற்க பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு திரண்டிருந்தனர். இதற்கான பிரத்யேக மேடை நடைமேடை அருகாமையில் போடப்பட்டிருந்தது.

ரயிலை வரவேற்க திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணா துரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்ல தம்பி ( திருப்பத்தூர் ) தேவராஜ் ( ஜோலார்பேட்டை ) மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் மேடையில் ஏறினர். இதைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட நிர்வாகிகளும் அந்த மேடையில் ஏறி ரயிலை வரவேற்க முயன்ற போது திமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், திமுக – பாஜக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதைக் கண்ட ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில் நிலை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், நிலைமை மோசமடைந்தது. இந்நிலையில், அம்ரித் பாரத் விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. உடனே, புறப்பட தயாரான அம்ரித் பாரத் விரைவு ரயிலை திமுக எம்பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வழக்கம் போல பச்சை கொடியை காட்டி அனுப்பி வைத்தனர்.

அந்த நேரத்தில் பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கம் ஏழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.உடனே, ரயில்வே துறை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த தேசிய கீதம் ஒலிப்பரப்பட்டதால் இரு கட்சியினரும் அமைதியாகினர். பிறகு அம்ரித் பாரத் விரைவு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் இரு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x