Published : 01 Jan 2024 09:46 PM
Last Updated : 01 Jan 2024 09:46 PM
சென்னை: “இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை. திமுக அரசு அமைந்ததும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கவிஞர் வைரமுத்துவின் "மகா கவிதை" நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "இந்த நேரத்தில் வைரமுத்துவிடம் ஓர் அன்பான ஒரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன். மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ‘கவிராஜன் கதை’ என்ற தலைப்பில் எழுதியதைப் போல, கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.
உங்கள் தமிழில் கருணாநிதிக்கு ஒரு கவிதை வரலாறு வந்தாக வேண்டும் என்ற உங்கள் ரசிகனின் வேண்டுகோள், இன்னும் கூட கொஞ்சம் உரிமையோடு சொன்னால் கட்டளை. மிகமுக்கியமான காலக் கட்டத்தில் இந்த நூலை எழுதி இருக்கிறார் வைரமுத்து. இதற்காக அவரை முதலில் பாராட்ட வேண்டும். புயலும் ,மழையும், வெள்ளமும் தலைநகர் சென்னை முதல் தென் மாவட்ட குமரி வரைக்கும் சுற்றிச் சுழன்றடித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ஐம்பூதங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். சென்னையாக இருந்தாலும் - நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர, எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை.
ஏரி உடைந்ததைப் போல வானம் உடைந்து கொட்டியதாக மழை பெய்துள்ளது. 100 ஆண்டில் பெரிய மழை. 177 ஆண்டில் பெரிய மழை, என்று சொல்கிறோமே தவிர, இதற்கான காரணம் என்ன என்பதை யாரும் சொல்லவில்லை. மண்ணும் நீரும் காற்றும் வானமும் மாசுபட்டு விட்டதால், அந்த இயற்கை தன் குணத்தை இழந்து வேறுபடத் தொடங்கி விட்டதன் அடையாளத்தைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மழை பெய்வது இல்லை.பெய்தால் அதிகமாக பெய்கிறது.காற்று மாசுபட்டு விட்டது. உஷ்ணக்காற்று அதிகமாக வீசுகிறது. புவி அதிகப்படியாக வெப்பம் அடைந்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து விட்டது.
இவை அனைத்தும் ஐம்பூதங்களைக் காக்கத் தவறியதன் விளைவுதான். இனியாவது விழிப்படையாவிட்டால் பேரழிவு அதிகமாகும் என்ற எச்சரிக்கை மணிதான் இந்த புத்தகம். நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாக காலநிலை மாற்றம்தான் இருக்கப் போகிறது என்பதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.
திமுக அரசு அமைந்ததும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாகத்தான், துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை" என்று அறிவித்தோம். தமிழ்நாட்டுக்கான காலநிலை திட்டத்தை அறிவித்தோம். நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன.
சுமார் 2 கோடியே 8 லட்சம் மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும். காலநிலை மாற்றம் குறித்து பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" தமிழகத்தில் செயல்படுத்தப்போகிறோம். இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Comapny" உருவாக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் துவக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, "காலநிலை மாற்ற நிர்வாக குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை” என்று முதல்வர் பேசினார். இந்த விழாவில் மநீம தலைவர் கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT