Published : 01 Jan 2024 06:27 PM
Last Updated : 01 Jan 2024 06:27 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களைக் கணக்கிட்டு, அவர்களுக்கும் அரசின் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் தலா ரூ.6,000 நிவாரணத் தொகையும், 5 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இதுபோல் மற்ற வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணி அந்தந்த ரேஷன் கடைகளில் கடந்த 29-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 3,69,067 குடும்ப அட்டைகளுக்கு ரூ.164.71 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு ரூ.6,000 வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தங்கள் பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு ரூ.1000-ம் மட்டுமே வழங்குவது பாரபட்சம் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் மனு அளித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, வெள்ளத்தில் உண்மையாகவே பாதிக்கப்படாதவர்களும், மாதந்தோறும் அதிக வருமானம் பெற்று வருவோரும்கூட இந்த நிவாரண தொகையை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருந்ததது குறித்த விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவின. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை கணக்கிட்டு அவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் தொகை வழங்கப்படுவது அரசுப் பணத்தை வாரியிறைத்தது போன்றது என்ற கருத்தும் எழுந்துள்ளது.
நிவாரணத் தொகை வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுப்பவர்களுக்கும் அரசு வாய்ப்பை தரவில்லை என்று திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் எம். முஹம்மது அய்யூப் தெரிவித்தார். அவர் கூறியது: ''கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் பொறுப்பாளர்கள் மூலமாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.220.76 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் செயலை வரவேற்கிறோம்.
இந்த நிவாரணங்கள் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறிய ஆறுதலையாவது ஏற்படுத்தும். கனமழை வெள்ள பாதிப்புக்குண்டானவர்களை கண்டறிந்து குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை கொடுக்காமல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவர்களுக்கும் வழங்குவதன் காரணமாக வெள்ள பாதிப்புக்கு ஆளாகாதவர்களில் ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள மக்களும் பயனடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் எங்களுக்கு வெள்ள பாதிப்பு கிடையாது; அதனால் நிவாரணம் பெற மனம் இடம் கொடுக்கவில்லை என்பவர்களும், வசதி வாய்ப்போடு இருக்கிறோம் எங்களுக்கு நிவாரணத் தொகை பெற விருப்பம் இல்லை என்று நினைப்பவர்களும் அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். இதற்காக ஒரு படிவம் நியாய விலைக் கடையில் உள்ளது. அதைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிப்பு செய்திருந்தால் நிவாரணத்துக்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பெருமளவு குறைந்திருக்கும்'' என்று முஹம்மது அய்யூப் தெரிவித்தார்.
ரேஷன் அட்டை இல்லாதவர்கள்: இது ஒருபுறமிருக்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களும் நிவாரண தொகை பெறமுடியாமல் தவிக்கிறார்கள். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையையொட்டி குடியிருப்புகளில் வெளிமாவட்ட, வெளி மாநிலத்தவர்கள் பலரும் தங்களது குடுபத்தினருடன் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். வெள்ளத்தில் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பலருக்கு ரேஷன் அட்டை இல்லாததால் நிவாரண தொகை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கு நிவாராண தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT