Published : 01 Jan 2024 04:39 PM
Last Updated : 01 Jan 2024 04:39 PM

“இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே... எண்ணூரை காப்பீர்” - முதல்வருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கடிதம்

சென்னை: "இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே. எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு கோரமண்டல் ஆலையை மூட வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஸ்டெர்லைட் தாமிர நச்சாலை எங்கள் ஊர் தூத்துக்குடியில் கால் பதித்த ஆண்டு தொடங்கி கடந்த 3 தசாப்தங்களாக பல முறை விஷவாயு கசிவு ஏற்பட்டு அதன் விளைவுகளை அன்றாடம் அனுபவித்து வந்திருக்கிறோம் என்பது உங்களுக்கும் தெரியும். தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும், கோரிக்கை வைத்தும்,, போராட்டங்கள் நடத்தியும் எங்கள் நியாயங்களை வென்றெடுக்க முயற்சிகள் பல மேற்கொண்டிருக்கிறோம். நீங்களும் எதிர் கட்சி தலைவராக இருந்த போது, இவை குறித்து ஆட்சியாளர்களை, அவர்களின் மெத்தனப் போக்கை கண்டித்திருக்கிறீர்கள்.

ஆயினும் ஆலையின் ஆணவப்போக்கு குறைந்த பாடில்லை. ஆலையின் முறைகேடுகளுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உறுதுணையாக இருந்ததால் ஆலையின் உள்ளேயும் வெளியே ஊருக்குள்ளும் மரணங்கள் தொடர்ந்தன.2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு கசிவு ஒட்டுமொத்த ஊரையும் பதம் பார்த்தது. ஒரு கட்டத்தில், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் 2018-ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை உலகறியும். இன்று அதே சூழல் தான் எண்ணூரில் நிலவுகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ரசாயனங்களின் பயன்பாட்டாலும், கழிவு வெளியேற்றத்தாலும் மக்கள் கொடூரமாக பாதிக்கப்படுவதை குறித்து எந்த கரிசனமும் இல்லாமல், நடந்துவிட்டது ஒரு பெரிய நிகழ்வு அல்ல என்ற அரசின் பார்வை மக்களைக் காயப்படுத்துகிறது.விஷக்காற்றின் கொடூர நெடியை தாங்க முடியாமல் தலை தெறிக்க தப்பி ஓடி பிழைத்த ஒரு பெண்ணின் வாக்குமூலம் மனதை குத்தி குதறுவதாக உள்ளது.

"நான் என் வாழ்க்கையில் ஓடியதே இல்லை... ஆனால் அன்றைய தினம் தலைதெறிக்க ஓடினேன். உயிருக்காக ஓடுகின்ற வலி எத்தனை கொடுமையானது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன்" என்ற பதிவில் இருக்கும் வலி எத்தனை பெரியது என்பது, முதல்வரே உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அல்லது உங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் கூட இருக்கலாம்.

வடசென்னை மக்கள் தங்களை சூழ்ந்திருக்கும் அவலங்களை குறித்து, தூத்துக்குடி மக்களை போலவே பல புகார்களை, தந்திருக்கிறார்கள். ஆனால் அவை அலட்சியப்படுத்தப்பட்டன. இந்த போக்கு இன்னொரு தூத்துக்குடிக்கு வழி வகுத்துவிடக் கூடாதே என்று பதறுகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை போலவே கோரமண்டல் ஆலையும் அடர்த்தியான மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஒரு மன்னிக்க முடியாத விதிமீறல். இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் எத்தனை கொடூரமானவை. ஆலைமொழியிலேயே சொல்வதாக இருந்தால், ஒரு "விபத்து" நிகழும் போது, மக்கள் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு, முதியோர் இழுத்துக் கொண்டு வீட்டை போட்டது போட்ட படி தலைதெறிக்க, எங்கே ஓடுவது என்றே தெரியாமல் ஓடவேண்டியதிருக்கிறது.

இது வெறும் உடல்தகுதி சார்ந்த, பொருள் இழப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. உளவியல் பாதிப்பும் கூட. இனி வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு கெட்ட கனவாய் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாக குழந்தைகளை துரத்தி கொண்டே வருமே!

தூத்துக்குடியில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக ஆலையின் தாக்கத்தால் நோய்வாய்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருக்க, 2018 ஆம் ஆண்டு குரூரமான முறையிலே உயிரிழந்த எங்கள் இளம் சொந்தங்களை தொலைத்த வேதனை எங்கள் மனங்களை இன்னும் பிசைந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே.முதல்வர் அவர்களே, எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு அந்த ஆலையை மூட வேண்டும் என்று அங்கு பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை எங்கள் அனுபவத்திலேயே நாங்கள் கேட்கிறோம். அந்த ஆலையை மூடுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x