Published : 01 Jan 2024 05:49 AM
Last Updated : 01 Jan 2024 05:49 AM
சென்னை: உலகம் முழுவதும் இன்று(ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஒரே தேசமாக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறியுள்ளோம்.அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதியுடன் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், தேசத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகம் சேர்க்கவும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்காக உறுதி ஏற்போம். இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வெற்றியை கொடுக்கட்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தேசமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு, புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாக அமைய வேண்டும். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக் கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீ திக்கான பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும்.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும். அதற்கான நம்பிக்கையும், உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. அனைவருக்கும் எனது இனியஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மலரும் புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகி, அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, குறைவில்லாத செல்வம் ஆகியவற்றை வழங்கும் ஆண்டாக அமைய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைக்க, சாதி, மதப் பாகுபாடுகளின்றி ஆதரவுக் கரங்கள் நீண்டன. நம் மக்களின் இந்த இயல்பான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அரசியல் மாற்றத்துக்கான நல்லாண்டாக 2024 உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், தொற்று நோய்கள் நீங்கி, வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை உருவாகும் ஆண்டாக 2024 திகழட்டும். தமிழகத்தில் மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: புதிய ஆண்டில் மத்தியில் இண்டியா கூட்டணியை அமரச் செய்து, நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சிக் கொள்கை, மதச்சார்பின்மையை காப்போம் என இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன்தான் பிறக்கின்றன. நம்பிக்கைதான் வாழ்க்கை. கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024-ம் ஆண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டில் புதிய வெளிச்சம் பிறக்கட்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இண்டியா கூட்டணி 2024-ல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டின் மதச்சார்பற்ற மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு ஆங்கிலப் புத்தாண்டில் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: விடைபெறும் ஆண்டின் அனுபவங்களை உரமாக்கி, பூக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: கடந்த ஆண்டில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து, மிகுந்த நம்பிக்கையுடன் புத்தாண்டில் பயணிக்க உள்ளோம். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகள், தளராத முயற்சியுடன் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை எதிர்கொள்வோம்.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி: 2024 நல்ல ஆண்டாக அமைய, அனைவர் வாழ்விலும் புத்தெழுச்சியும், புது நம்பிக்கையும் பிறந்து, இன்பம் பெருகி, மகிழ்ச்சியுடன், மனநிறைவோடு புதிய சாதனைகளை படைத்து நலமுடன் வாழ அனைவருக்கும் இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்தகாலமாக அமைய வேண்டும். அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகி, துன்பங்கள் நீங்கி, புத்தொளி பிறக்கட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்த அனைவரது பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும், உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆண்டாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
இவர்களுடன், பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமக தலைவர் ரா.சரத்குமார், வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் ஜி.ஜி.சிவா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல், உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT