Last Updated : 01 Jan, 2018 10:37 AM

 

Published : 01 Jan 2018 10:37 AM
Last Updated : 01 Jan 2018 10:37 AM

சஞ்சய் சுப்பிரமணியன் என்ற பாடும் ‘ஆண்ட்ராய்டு’

‘ஆண்ட்ராய்டு’ என்பது ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஆபரேடிங் சிஸ்டம் என் பது அறிந்ததே. அதன் உண்மை யான அர்த்தம் ‘மனித உருவ இயந்திரம்’ என்பதே. அதாவது, ‘எந்திரன்’ திரைப்பட ரஜினி போல. சஞ்சய் சுப்பிரமணியனின் பாட்டு கச்சேரிக்கு போய் முன்வரிசையில் அமர்கிறோம். அவர் கச்சேரியை ஆரம்பிக்கிறார். சில நொடிகளில் நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றுகிறது.. ‘ஒய், நீர் மனுஷனே இல்லய்யா, பாடும் ஆண்ட்ராய்டு!’ அப்படியொரு அமானுஷ்யமான பாட்டு. மனுஷனாலே இப்படி பாட முடியாது!

தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் நடந்த கச்சேரி. எல்லாம் தமிழ் பாடல்களாகவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.மடமடவென, ‘மாயே’ என்று தொடங்கும் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி இயற்றிய ஆபோகி ராக வர்ணம், ‘உனது பாதம்’ என்று தொடங்கும் சக்ரவாகம் ராகத்தில் அமைந்த ராமசாமி சிவனின் பாடல் என்று கச்சேரி சூடுபிடித்தது. சக்ரவாகப் பாடலுக்கு நிறைய கல்பனா ஸ்வரங்கள் பாடினார். 16-வது மேளகர்த்தா வான சக்ரவாகத்தில் ‘ம க ரி’ என்ற பிரயோகத்துக்கு அனுமதி இருந்தாலும், காந்தாரத்தை விட்டுவிட்டு ‘ம ரி’ என்ற ஸ்வரத்தை அடிக்கடி பிடித்தார். அழகான ஸ்வர ப்ரஸ்தாரங்களில் குறிப்பிடத்தக்கது மேல் மத்யமத்தில் ‘மா...’ என்று அவர் பிடித்த நீண்ட கார்வை.

‘உனது பாதம்’ கீர்த்தனையை நாம் ரசித்து உள்வாங்கிக் கொள்ளும் முன்பு, அடுத்த ஆலாபனையை முணுமுணுக்கத் தொடங்கினார். ‘சிந்து பைரவி’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘யோசனா கமல லோச்சனா’, அதற்கு முன்பு ‘திருவிளையாடலில்’ பாலமுரளி கிருஷ்ணாவின் ‘எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ’, அதற்கும் முன்பு ‘திருநீலகண்டர்’ படத்தில் எம்கேடி பாடிய ‘மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம்’ போன்ற வரிகள் மனதில் ஜொலித்தன. தர்பார் என்று புரிந்துவிட்டது. ஆலாபனையில் தர்பாரை கொஞ்சினார் சஞ்சய். தனது வில்லால் அதற்கு பதில் அளித்தார் வயலின் எஸ்.வரதராஜன்.

சஞ்சய்க்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. பழக்கப்பட்ட பல பாடல் கள் இருந்தாலும், யாருக்கும் தெரியாமல் ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் கீர்த்தனங்களைத் தேடிக் கொணர்ந்து சமர்ப்பிப்பார். அன்று, ‘ராசனை தொழு’ என்ற நீலகண்ட சிவனின் பாடலை எடுத்து விட்டார் பாருங்கள்... சபை ஸ்தம்பித்து வியந்தது! அதில் கல்பனா ஸ்வரங்கள் பாடாமல் ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தி, கடைசி வரி முடிந்த பின் மிருதங்க வித்வான் நெய்வேலி வெங்கடேஷின் மூன்று ஆவர்த்தனங்களுடன் பாடலை முடித்தது தான் குறை. அட என்னய்யா.. ‘கக்காரிஸ, நின்னீதப, கக்காரிஸ’ என்று அசத்துவீர் என்று பார்த்தால், இப்படி ஏமாற்றிவிட்டீரே!

‘போகட்டும், கவலைப்படாதீர்கள், நிறைய தருகிறேன்’ என்று மேடையில் இருந்து பதில் அளிப் பது போல, ‘குன்றம் ஏந்தி’ என்ற ஆழ்வார் பாசுரத்தை மோகன ராகத்தில் அள்ளி வீசினார் இசை வள்ளல் சஞ்சய். வயலின் வரதராஜனுக்கு வாசிக்க அவகாசம் கொடுத்து, அடுத்தடுத்து ‘ஊரிலே காணி இல்லை’, என்றும், ‘குலம் தரும் செல்வம்’ என்றும் தொடங் கும் பாசுரங்களைப் பரவவிட்டார். அவரது பாடல்களில்தான் என்னே உணர்ச்சி பலம்! ‘காரிருள் வண்ணனே கண்ணா’ என்று வாய்விட்டுக் கூவும்போது மெய் சிலிர்த்தது, கண்கள் குளமாகின! தொடர்ந்து ‘நாராயண திவ்ய நாமம்’ என்ற பாபநாசம் சிவன் பாடல், ‘மாற ஜனகன் கருணாலயன்’ என்ற வரிகளைப் புரட்டிப் போட்டு நிரவல், அதனை ஒட்டி ஆயிரக்கணக்கான கல்பனா ஸ்வரங்கள்! மேடையில் மோகனம் உருப்பெற்று நர்த்தனமாடியது. அடுத்து, ‘வேலும் மயிலும்’ என்று தொடங்கும் கோடீஸ்வரய்யரின் சுசரித்ரா ராகப் பாடல்.

மணி 8.40. வருவது ராகம் தானம் பல்லவி என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த ராகம் என்பதுதான் சஸ்பென்ஸ். நெய்வேலி வெங்கடேஷ் டொக் டொக் என்று மிருதங்கத்தைச் சுருதி சேர்த்தார். ரசிகர்கள் நாற்காலி முனைக்கு நகர்ந்தனர்.

‘ம்ம்ம்ம்...’ என்று தொடங்கினார் சஞ்சய். எழுந்தது ‘சஹானா’ ஆலாபனை மற்றும் தானம். மிக அருமை என்றாலும், தர்பார், மோகனத்தில் இருந்த ஆழம், அழுத்தத்தைவிட சற்று குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பாடுவது சஞ்சய் என்பதால், இன்னும் கொஞ்சம் நன் றாக பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், ராகமாலிகை ஸ்வரங்களில் மறுபடி யும் சூடுபிடித்தது. கதனகுதூகலம், ரஞ்சனி, ஆபேரியில் அமைந்த ஸ்வர ப்ரஸ்தாரங்கள் கல்யாண சாப்பாடுதான். அதி லும் அந்த ஆபேரி! ‘பா...கா’ என்ற இரண்டே ஸ்வரங்களில் ஆபேரியை சித்தரித்தார் சஞ்சய். ரெண்டே ஸ்வரங்களில் ராகம் இதுதான் என தெளிவானது. ‘நீ ஸ க ரி ஸ’ என்று பாடியபோது ‘சிங்கார வேலனே...’ நினைவுக்கு வந்தது. தொடர்ந்தது சாட்டை வீச்சு போல ஸ்வரங்கள். என்ன கற்பனை, என்ன அழகு! கலக்கியது சஞ்சய் என்ற பெயர் கொண்டபாடும் ஆண்ட்ராய்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x