Published : 29 Jan 2018 09:49 AM
Last Updated : 29 Jan 2018 09:49 AM
மதுரை அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே விரிசலை ஏற்படுத்தி உள்ள சுவர் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உயர்நிலைக் குழுவை அமைத்து இரு தரப்பினரையும் உடனே அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீண்டாமைச் சுவர் என்றாலே அது மதுரை மாவட்டம் உத்தபுரத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு கடந்த காலத்தில் அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரிய போராட்டத்துக்குப் பிறகு அந்த சுவர் இடித்து அகற்றப்பட்டது. அதேபோல மதுரை மாவட்டத்தில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இருபிரிவு மக்களிடையே கடந்த 5 ஆண்டுகளாக ஒரு சுவர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஒற்றுமையுடன் கிராம மக்கள்
மதுரையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இந்திரா காலனியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பு மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் இருதரப்பினரும் தனித்தனியாக கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். இரு கோயில்களுக்கும் இருதரப்பு மக்களும் சென்று வழிபடுவதும், திருவிழாக்களில் பங்கேற்பதுமாக ஒற்றுமையாக இருந்தனர்.
பேச்சுவார்த்தையில் தீர்வில்லை
இந்நிலையில், 2013-ம் ஆண்டு ஒருதரப்பினருக்கு சொந்தமான கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இந்த சுவர் கட்டப்பட்ட இடம் இரு தரப்பினருக்கும் பொது பயன்பாட்டுக்கு அரசு ஒதுக்கிய நிலம் என்றும், அந்த நிலத்தில் கட்டிய சுவரை அகற்ற வேண்டும் என்றும் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பு மக்களிடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், ஆர்டிஓ, போலீஸார் என இருதரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், அந்த சுவரை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் சுவரை அகற்றாததால் அதிருப்தியடைந்த ஒருதரப்பினர், கடந்த 23-ம் தேதி ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்று சுவரை இடிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. சுவர் இடிப்பை தடுக்க எதிர்தரப்பும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே தொடரும் மோதலால் சர்ச்சைக்குரிய சுற்றுச்சுவர் பகுதியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து இருதரப்பைச் சேர்ந்த உள்ளூர் மக்களை பேச அணுகியபோது, பிரச்சினைக்குரிய அந்த சுவர் குறித்து யாருமே பேச மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி விடுதலைவீரன் கூறியதாவது: ஆதிதிராவிட நலத் துறையினரால் கொடுத்த ஒரு ஏக்கர் 5 சென்ட் இடத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இதில் 62 சென்ட் புறம்போக்கு நிலத்தை இருதரப்பினரின் பொதுப் பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கியது. அந்த புறம்போக்கு நிலத்தில் ஒருதரப்பினர் கோயில் கட்டினர். மீதி இடம் பொது புழக்கத்தில் இருந்தது. அதுவரை பிரச்சினை எழவில்லை.
ஆனால், கோயிலைச் சுற்றி எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியை பயன்படுத்த விடாதபடி 2013-ம் ஆண்டில் சுற்றி வேலி அமைத்தனர். இதுகுறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்திடம் புகார் கொடுத்து வேலியை அகற்றினோம். ஆனால், மீண்டும் காம்பவுண்ட் சுவர் கட்டினர். கோழி, ஆடுகள் அவர்கள் இடத்துக்குள் செல்லும்போதும், சிறுவர்கள் விளையாட செல்லும்போதும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இது கிராமங்களில் இயல்பாகவே ஏற்படும் பிரச்சினைகள்தான். அதை அவர்களே பேசித்தீர்த்துக் கொள்வார்கள்.
தற்போது கோயில் சுவரைக் கட்டியதுகூட பிரச்சினையில்லை. ஆனால், ஆதிக்க ஜாதியினர்போல தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு தரப்பினரே, தங்களுடைய மற்றொரு சமூகத்தினரை தீண்டத் தகாதவர்களாக பார்ப்பதுதான் தற்போதைய முக்கிய பிரச்சினை. இந்த நோக்கத்துடனேயே கோயில் சுவரும் கட்டப்பட்டதாக எதிர்தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
அது தீண்டாமை சுவரே இல்லை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் அ.செல்லப்பாண்டியன் கூறியதாவது: தீண்டாமைச் சுவர் என்று உறுதி செய்யப்பட்டால் அதை இடிக்கிற முதல் நபர்களாக நாங்கள் இருப்போம். இருதரப்பு மக்களையும் தீண்டத்தகாதவர்களாக பார்க்கிற சமூகம்தான் தற்போது இருக்கிறது. இதில் போய் தீண்டாமை என்ற வார்த்தையை சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ஒரே கிராமத்துக்குள் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சண்டையை பேசி தீர்த்துக் கொள்ளலாம். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் வாழக் கூடியவர்கள். அவர்களுடைய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். இதில் போய் சிலர் சுவரை மையமாக வைத்து அரசியல் செய்வது அநாகரிகமானது. முன்பும் அவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. அவர்களாகவே பேசி தீர்த்துக் கொண்டனர். தற்போது வெளிநபர்கள் உள்ளே வருவதால் சாதாரண சுவர் பிரச்சினை தீண்டாமை சுவராக தவறாக உருவகப்படுத்தப்படுகிறது. அரசு நேரடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்றார்.
வழி தெரியவில்லை
இதுபற்றி பேரையூர் வட்டாட்சியர் உதயச்சந்திரன் கூறியதாவது: தற்போது சுவர் எழுப்பிய இடத்தில் ஏற்கெனவே அமைத்து இருந்த கம்பிவேலியை புகாரின்பேரில் அகற்றினோம். அதன்பிறகு சந்தையூர் ஜமீன்தார் முன்னிலையில் பேசி தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தபிறகே, மற்றொரு தரப்பினர் சுமார் 4 சென்ட் அளவில் காம்பவுண்ட் சுவரைக் கட்டி உள்ளனர். இந்தச் சுவரை 11 அடி நடைபாதைக்கு இடம் விட்டு எழுப்பி உள்ளனர். தற்போது 11 அடி பாதை பள்ளமாக இருப்பதால் மழைநீர் போக வழியின்றி அதில் பேவர் பிளாக் பதிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்தரப்பினர் பிரச்சினையைக் கிளப்பியதால் சுவரை இடிக்கக் கோரி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். அரசு சுவரை இடித்தால், மீண்டும் அரசே கட்டித்தர வேண்டிய சூழல் உருவாகும் என மற்றொரு தரப்பினர் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஜன. 29-க்குள் (இன்று) இடிக்க வேண்டும் என கெடு இருந்தது. இப்பிரச்சினையை வரும் பிப். 5-ம் தேதிக்கு மேல் ஒத்திவைத்து இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளோம் என்றார்.
தீர்வுக்கு வழி என்ன?
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், இரு சமூகங்களைச் சார்ந்த மாநில அளவிலான தலைவர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழுவை முதல்வர் உத்தரவின்பேரில் அமைத்து, இக்குழு விரிவான பேச்சு நடத்தி, இரு தரப்பினரும் ஏற்கும்படியான தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தாமதமானால், உத்தபுரம் சுவரைப்போல் மேலும் பரபரப்பாகி, இருதரப்பு மக்களிடையேயான விரிசல் மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT