Published : 28 Aug 2014 03:54 PM
Last Updated : 28 Aug 2014 03:54 PM

சில்லறை முதல் பிக் பாக்கெட் வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு

பயணிகள் இருக்குமிடத்திற்குச் சென்று டிக்கெட் கொடுங்கள். எப்போதும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர் டிக்கெட் பரிசோதர்களான சகோதரிகள் சரஸ்வதி, சாந்தி.

1980-ல் போக்குவரத்துக் கழகம் முதன்முதலில் பெண்களை நடத்துனர் பணியில் அமர்த்தியது. அந்த முதல் பேட்சில் இடம்பெற்றிருந்தனர் சாந்தி, சரஸ்வதி. இவர்கள் இருவரும் சகோதரிகள்.

4பி, 14 பேருந்துகளில் இவர்கள் பணியாற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருவரும் டிக்கெட் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். நடத்துனராக தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

"ஆரம்பத்தில் பேருந்தில் பேலன்ஸ் செய்வதே மிகவும் கடினமானதாக இருந்தது. போகப்போக பழகிவிட்டது. 30 ஆண்டுகள் பணி காலத்தில் எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. சில்லறை விநியோகிப்பதில் சில பயணிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

சிலர் எங்களை தாக்க முயன்றிருக்கின்றனர். நிறைய கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்களையும், புட் போர்டு அடிப்பவர்களையும் சமாளிப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது" என கூறினர்.

இருப்பினும் சில மறக்க முடியாத தருணங்களும், மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன என்பதையும் தெரிவித்தனர்.

"பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் இருந்து பயணிகளை நாங்கள் பாதுகாப்பது மிகவும் சுவாரஸ்யமானது. பிக்பாக்கெட் நபர்களை எங்களுக்கு நன்றாகவே அடையாளம் தெரியும். அவர்கள் பஸ்சில் கால் வைத்தவுடனேயே, பயணிகளுக்கு நாங்கள் அலெர்ட் கொடுத்து விடுவோம். யப்பா படியருகே நிற்காதே உள்ளே போ... உள்ளே போ என நச்சரிப்பதிலேயே பயணிகளும் புரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் பிக்பாக்கெட் நபர்கள் பஸ்சில் ஏறவே அனுமதிக்க மாட்டோம்"என சாந்தியும், சரஸ்வதியும் கூறினர்.

இன்னும் சில நாட்களில் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள இவர்கள் அட்வைஸ்: "பயணிகள் இருக்குமிடத்திற்குச் சென்று டிக்கெட் கொடுங்கள். எப்போதும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்பதே ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x