Published : 31 Dec 2023 08:29 AM
Last Updated : 31 Dec 2023 08:29 AM

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ‘சவாலான’ அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கப்பணி தொடக்கம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மிகவும் சவாலான சுரங்கப் பாதை பணியாகக் கருதப்படும், அடையாறு ஆற்றின் கீழே 56 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது.

அடுத்த ஒன்றரை மாதங்களில் ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பை அடைய உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் ( 45.4 கி.மீ. ) வரையிலான 3-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்டப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த வழித் தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியிலிருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த பிப். 16-ம் தேதி தொடங்கியது. இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான `அடையாறு' ஆகியவை அடுத்தடுத்து பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் டிபி சாலைக்குக் கீழே சுரங்கப் பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்புநிலையத்தை சென்றடைய உள்ளன.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ( டிபிஎம் ) மூலமாக, இதுவரை 583 மீட்டர் சுரங்கப் பாதையும், 2-வது இயந்திரம் மூலமாக, இதுவரை 250 மீட்டர் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் பல்வேறு கட்டமாக நகர்ந்து வரும் நிலையில், `காவிரி' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றுப் படுகையை நேற்று அடைந்தது. தொடர்ந்து, அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை பணியைத் தொடங்கியது.

அடுத்த ஒன்றரை மாதங்களில் அடையாறு ஆற்றைக் கடந்து அடையாறு சந்திப்பை அடைய உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர்தி.அர்ச்சுனன் கூறியதாவது: மென்மையான பாறைகள்: அடையாறு ஆற்றின் கீழே பாறைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. எனவே, இப்பணி மிகவும் சவாலானதாக இருக்கும். இப்பணி தொடர் தீவிர காணிப்புடன், மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும்.

அடையாறு ஆற்றில் 350 மீட்டர் நீளம் கொண்ட பாதையில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வேகம் குறைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதாவது, மற்ற பகுதிகளில் தினமும் சராசரியாக 15 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும் நிலையில், இங்கு தினமும் அதிகபட்சம் 7 மீட்டர் வரை மட்டுமே சுரங்கம் தோண்டப்படும்.

இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அடுத்த ஒன்றரை மாதங்களில் அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது இயந்திரம் அடுத்த 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றுப் படுகையை அடைந்து, பணியைத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x