Published : 05 Jan 2018 09:47 AM
Last Updated : 05 Jan 2018 09:47 AM

இன்னும் ரூ.5 கோடி மட்டுமே தேவை: ஹார்வர்டு தமிழ் இருக்கை இன்னும் சிறிது தூரம்தான்

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர்கள்(ரூபாய் 40 கோடி) ஆதார நிதியாகத் தேவை. அதைத் திரட்டும் முயற்சிகள் தற்போது இலக்கை வெற்றிகரமாக நெருங்கிக்கொண்டிருக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க வாழ் தமிழக மருத்துவர்களான ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் தலா அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை தந்து ஹார்வர்ட்டில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒப்புதல் பெற்றனர். எஞ்சிய ஐந்து மில்லியன் டாலர்களை உலகத்துத் தமிழர்களிடம் இருந்தும், தமிழக அரசிடமிருந்தும் திரட்டவேண்டும். அப்பொழுதுதான் ஹார்வர்ட் தமிழ் இருக்கை (Community Chair) தமிழர்கள் அனைவராலும் நிறுவப்படும் இருக்கை என்ற சிறப்புத் தகுதியைப் பெறும். எனவே தமிழகத்திலும் தமிழர்கள் பரந்துவிரிந்து வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் நன்கொடைகள் திரட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகிறது ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு. இந்த உயரிய நோக்கத்தை மக்கள் அறிந்திட அவர்களிடம் இதைக் கொண்டுசேர்த்துவரும் பணியில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து முன்னெடுத்துவருகிறது.

தமிழுக்கு மேலும் இரண்டு இருக்கைகள்

இந்தியா உட்படத் தமிழர்கள் பரந்துவிரிந்து வாழும் பல நாடுகளிலிருந்து நன்கொடைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வியட்நாம், சீனா, தென்கொரியா, பொட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்துகூட நன்கொடைகள் வந்திருக்கின்றன. ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியானது வேறுபல முக்கிய அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைக்கும் செயல்பாட்டையும் தூண்டியிருக்கிறது. நியூ யார்க்கிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புதல் பெற்றிருக்கிறார் மருத்துவர் பாலா சுவாமிநாதன்.

அதேபோல் கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரான ரவி குகதாசன். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், ஹார்வர்ட் தமிழ் இருக்கை உலகளாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு சார்ந்த ஒற்றுமை உணர்வாக மாறியிருப்பது தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ்த் தொண்டர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உற்சாகத்தைக் கிளப்பியிருக்கிறது.


இந்தியாவிலிருந்து…

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையத் தமிழக அரசு சுமார் 10 கோடி ரூபாய் (1.5 மில்லியன் டொலர்கள்) நன்கொடை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் இரண்டு கோடி ரூபாய் திரட்டி அளிப்பதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழராசிரியரான 83 வயது ராமசாமி ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் இரா.வேங்கடசாமி தன் ஒருநாள் வருவாய் முழுவதையும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு இணையம் மூலம் நன்கொடையாகச் செலுத்தியிருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 38,500 டாலர்களும்(இந்திய மதிப்புக்கு சுமார் 30 லட்சம்) அளித்திருக்கிறார். மலேசியாவின் கோலாலம்பூரில் வசிக்கும் தான்ஸ்ரீ சோமசுந்தரம் 153,000 டாலர்கள் தந்திருக்கிறார், கனடாவில், ஹார்வர்ட் எழுச்சி கீதம் பாடல் மூலம் சுமார் 25,000 டாலர்கள் நிதி சேகரித்திருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஜெசிக்கா ஜூட். 

அள்ளித்தரும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள்

h1 1jpg50  h1 2JPG50h1 3jpg50h1 4jpg50

 

தற்போது அமெரிக்க காங்கிரஸ் அங்கத்தவர் பதவி பெற்ற முதல் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவு ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குக் கிடைத்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 16, 17 தேதிகளில் அமெரிக்காவில் பல மாநிலங்களில் நிதி சேகரிப்பு விழாக்கள் நடத்தப்பட்டன. கரோலைனா தமிழ்ச் சங்கம் 20,000 டாலர்கள், மிச்சிகன் தமிழ்ச் சங்கம் 10,000 டாலர்கள் நிதியைத் திரட்டி வழங்கினார்கள். ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக முதன்முதல் கொழும்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மூலம் 16,000 டாலர்கள் திரட்டப்பட்டன. கிளீவ்லண்ட் தமிழ் மலர் மன்றம் கல்விக்கூடமும் சிறுவர் சிறுமிகள் மூலம் கைவினைப் பொருட்கள் விற்று நிதி திரட்டியதும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.  நியூஜெர்சி சுசி மார்ல்டன் சமையற்கூடமும்  உணவு வழங்கி  நிதி சேகரித்து உதவியது. இந்த விழாக்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும், இந்தியாவிலும், வேறுபல நாடுகளிலும் தொடர்ந்து கொண்டாடப்படுவதற்கான  முயற்சிகள் நடக்கின்றன. தினமும் புதுப்புது தமிழ்ச் சங்கங்கள் ஆர்வத்துடன் முன்வந்து பங்கேற்கும் இந்த உணர்வானது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.


இவ்வளவுதான் தேவை

இன்றைய நிலவரப்படி தமிழ் இருக்கை அமைய இன்னும் ஆறரை லட்சம் டாலர்கள் மட்டுமே தேவை. அதாவது இந்தியப் பணத்துக்கு 5 கோடிக்கும் குறைவான தொகை.  வெகு விரைவில் இந்த நிதி திரட்டப்பட்டு தமிழ் இருக்கை உருவாகிவிடும் என அமைப்பாளர்கள் நம்புகிறார்கள். ஹார்வர்டு இருக்கையானது ஒன்றிரண்டு செல்வந்தர்களால் உருவாக்கப்படவில்லை; உலகத் தமிழர்களால் உருவாக்கப்படுகிறது என்ற உயரிய அம்சம் தமிழர்கள் அனைவரையும் பெருமைகொள்ளச் செய்திருக்கிறது. அந்த வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் தமிழர்களை ஆச்சரியத்துடன் நோக்கி வருகிறது. இந்த அரிய வரலாற்று முயற்சியில் உங்களையும் இணைத்துக்கொண்டு ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய உங்களால் முடிந்த நிதியை அளிக்க harvardtamilchair.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று Donate பட்டனை அழுத்திச் செலுத்துங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x