Published : 31 Dec 2023 04:00 AM
Last Updated : 31 Dec 2023 04:00 AM
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து சென்னை, கோயம் பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, ‘வெகு விரைவில் கேப்டன் எங்கள் வீட்டில் பேரனாக வந்து பிறப்பார்’ என பிரேமலதா கூறினார். பிற்பகல் 2 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். விஜயகாந்தின் சமாதி அருகே பொது மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: ”இறுதி அஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பெயர் நிலைத்திருக்கும் வகையில் பிரம்மாண்டமாக சமாதியை நிறுவ இருக்கிறோம். இனி பொதுமக்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேமுதிக தலைமையகத்துக்கு வரலாம்.
அதே நேரம், பொது இடத்தில் ஒரு மணி மண்டபமும், சிலையையும் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இதை மக்கள் கோரிக்கையாக வைக்கிறோம். அதை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். அவர் விட்டுச் சென்ற பணிகள் ஏராளமாக இருக்கின்றன. தேமுதிகவினர் ஒரே கரமாக இணைந்து, விஜயகாந்தின் லட்சியத்தை வென்றெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறும்போது, “ஜன.1-ம் தேதி வரை காலை 9 முதல் இரவு 9 வரை சமாதியில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார். இதற்கிடையே, சென்னை, தரமணியில் உள்ள திரைப் படக் கல்லூரியில் விஜயகாந்துக்கு நேற்று அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், திரை பிரபலங்கள் பங்கேற்று, நினைவுகளைப் பகிர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT