Published : 31 Dec 2023 04:14 AM
Last Updated : 31 Dec 2023 04:14 AM
போடி: கனமழையால் கடந்த 18-ம் தேதி போடிமெட்டு மலைச் சாலையின் பல இடங்களில் விழுந்த பாறைகள், மண் குவியல் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தையும், கேரளத் தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச் சாலை உள்ளது. இச்சாலை போடியில் இருந்து முந்தல் வரை 7 கி.மீ. தூரத்துக்கு தரைப் பகுதியிலும், 20 கி.மீ. தூரம் மலைப் பாதையிலும் அமைந்துள்ளது. இதில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சுற்றுலாத் தலமான மூணாறுக்கான பிரதான சாலை என்பதால், இச்சாலையில் போக்கு வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கனமழையால் கடந்த 18-ம் தேதி மலைச் சாலையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ஏராளமான பாறைகள் சாலையில் விழுந்தன. இவை தற்காலிகமாக அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. பல இடங்களில் பாறைகள், மண் குவியல்கள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.
குடும்பத்துடன் காரில் சுற்றுலா வரும் பலருக்கு இப்பாதை புதியதாக உள்ளதால், திருப்பங்களில் குவிந்திருக்கும் பாறைகள், மண் குவியலை பார்த்து நிலை தடுமாறுகின்றனர். எனவே, மண் குவியலை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேசிய நெடுஞ் சாலைத் துறையினர் கூறுகையில், மண் குவியல்கள் தொடர்ந்து அகற்றப் பட்டு வருகின்றன. சமீபத்தில் பெய்த கனமழை மலைப் பகுதி மண்ணை நெகிழ்வுத் தன்மையாக மாற்றி விட்டது. இதனால் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்துடன் சாரலும், மூடு பனியும் சாலை மற்றும் மலையின் ஈரத் தன்மையை அதிகரித்துவிட்டது. எனவே, வாகன ஓட்டுநர்கள் கவனமாக மலைப் பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT