Published : 30 Dec 2023 07:51 PM
Last Updated : 30 Dec 2023 07:51 PM

நெல்லை, தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் 01.02.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது:

> திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

> இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரை வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும். 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பயிர்கள் சேத இழப்பீட்டு நிவாரணமாக மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

இதேபோல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் உதவி, தொழிலாளர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நிவாரணத் தொகுப்புத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு விவரம் > ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x