Published : 30 Dec 2023 01:12 PM
Last Updated : 30 Dec 2023 01:12 PM
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. அதன்படி, இதுதொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறும்பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. மாலை நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக சொல்லி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினர். மேலும், ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக இருவரும் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இதே விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் இருந்ததால் அந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக அப்போது ஆலோசனை நடத்தவில்லை. இந்த நிலையில் தான் இன்று ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT