Published : 30 Dec 2023 05:05 AM
Last Updated : 30 Dec 2023 05:05 AM

மக்கள் சிரமமின்றி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த துரிதமாக ஏற்பாடு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையே விஜயகாந்தின் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், சிரமமின்றி அஞ்சலி செலுத்த இடம் ஒதுக்கி கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து தீவுத்திடலில் அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டு 6 மணி நேரத்தில் இரவோடு இரவாக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்து கொடுத்தார். இதனால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வரிசையில் நின்று எந்த சிரமுமின்றி தங்களது கண்ணீரை காணி்க்கையாக்கினர்.

அஞ்சலி செலுத்த வந்த முக்கியபிரமுகர்களுக்கு உரிய பாதுகாப்புஅளிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்இருந்து கோயம்பேட்டில் உள்ளதேமுதிக அலுவலகத்துக்கு இறுதிஊர்வலமாக எடுத்து வரப்பட்டபோதும், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோதும் டிஜிபிமற்றும் மாநகர காவல் ஆணையருக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவின் காரணமாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏற்கெனவே முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்த போது அவரது உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்டபோது ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்துக்கு அதுபோல எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டபோதும் ஒரு சகோதரரைப் போல முதல்வர் ஸ்டாலின்சக அமைச்சர்களுடன் அருகில்இருந்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்துக்காக முதல்வர் மேற்கொண்ட இந்த துரித நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வாகனத்துக்கான மலர் அலங்கார செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது என் பது குறிப்பிடத்தக்கது.

அனுமதி வழங்கிய சென்னை மாநகராட்சி: விஜயகாந்த் உடலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி, விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்தார். இதற்கு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரர் அனுமதி கோரியுள்ள இடம், அவரது சொந்த இடம். இதுநாள் வரை அது மயான பூமியாகவோ, இடுகாடு, சுடுகாடாகவோ இல்லை என்பது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இதுநாள் வரை மயான பூமி பயன்பாடு இல்லாத இடம் என்பதால், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டம் மற்றும் விதிகளின்படி, அமைந்தகரை தாலுகா எல்லைக்கு உட்பட்ட கோயம்பேட்டில் 28 ஆயிரம் சதுர அடியில் உள்ள இடத்தின்பின் பகுதியில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி கடிதம் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி உரிமக் கட்டணம் நிர்ணயிக்க மன்றத்தின் அனுமதி பெறும் பணி நடைமுறையில் உள்ளதால், மாநகராட்சி மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மயான பூமி உரிமக் கட்டணமாக விண்ணப்பதாரர் பின்னர் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை அடிப்படையில் மன்றத்தின் அனுமதி பெற்று உரிமம் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட நிபந்தனை அடிப்படையில், தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று, மாநகராட்சி சார்பில் தமாகா முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார், கல்வியாளர் ஜேபிஆர் உள்ளிட்டோரின் உடல்களை, அவர்களின் சொந்த இடத்தில் அடக்கம் செய்ய ஏற்கெனவே அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x