Published : 30 Dec 2023 05:53 AM
Last Updated : 30 Dec 2023 05:53 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் இருந்தனர்.
அப்போது முதல்வரிடம் ராமதாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இந்தியாவில் தமிழகத்துக்கு இணையாக சமூகநீதியை பாதுகாக்கும் மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அக்.2-ம் தேதி வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, கடந்த அக்.21-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். இதை பாமகவும் ஆதரிக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். அதனால்தான் மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால், 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் பிசி, எம்பிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இதற்கு சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் எந்த தடையும் இல்லை. எனவே தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘‘தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய முதல்வரிடம் தெரிவித்தோம். கோரிக்கைகளை ஆய்வு செய்வதாக முதல்வர் தெரிவித்தார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT