Published : 30 Dec 2023 06:36 AM
Last Updated : 30 Dec 2023 06:36 AM

எண்ணெய் கழிவுகள் நிவாரணம் வழங்க நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம்: மீனவர்கள் பிரதிநிதிகள் எச்சரிக்கை @ பழவேற்காடு

திருவள்ளூர்: பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் எண்ணெய் கழிவுகள் கலந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என, மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மிக் ஜாம் புயல் காரணமாக பெய்த அதி கன மழையின் போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணெய் கழிவுகள், மழைநீரோடு கலந்து சென்னை- மணலி புதுநகர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓடியது.

அவ்வாறு ஓடிய எண்ணெய் கழிவுகள் முகத்துவாரம் வழியாக எண்ணூர் கடற்பகுதிகளில் கலந்தது. இந்நிலையில், எண்ணூர் கடற்பகுதிகளில் கலந்த எண்ணெய் கழிவுகள், பழவேற்காடு கடல் மற்றும் ஏரி பகுதிகளுக்கும் பரவியது: இதனால், கடல் மற்றும் ஏரிக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி கடந்த 26-ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என, ஏற்கெனவே மீனவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில், திருவள்ளூர் எஸ்.பி. சீபாஸ் கல்யாண், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் கங்காதரன், பொன்னோரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் கழிவுகள் பரவியது இதனால், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் உள்ளதால், பழவேற்காடு உள்ளிட்ட 56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவ பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர், ``மீனவ பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீனவ சமுதாயத்தை சார்ந்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெறவும், மீன்வளத் துறை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் கடன் உதவிகள் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீனவ பிரதிநிதிகள், “பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் எண்ணெய் கழிவுகள் கலந்ததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் வழங்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x