Published : 29 Dec 2023 09:24 PM
Last Updated : 29 Dec 2023 09:24 PM

சோகம் சூழ்ந்த மதுரை விஜயகாந்த் வீடு - துயருடன் வருகை தந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜயகாந்தின் வீடு

மதுரை: விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் அவரது இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாத தென் மாவட்ட ரசிகர்கள் மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று கவலையுடன் பார்த்து வருகிறார்கள். இதனால், மதுரையில் உள்ள விஜயகாந்த் வீடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சினிமா, அரசியல் இரண்டிலும் ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். மதுரை மேற்கு மேலமாசிவீதியில் வசதியான மில் உரிமையாளர் அழகர்சாமி வீட்டில் பிறந்தாலும், விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான் இவரது நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்த் தந்தை அழகர்சாமி, அவரை படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால், சினிமா பார்ப்பதும், அரசியல் பேசுவதுமாக அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையாகவே வலம் வந்தார். படிப்பின் மீது நாட்டமில்லாமல் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஆரம்பத்தில் மேற்கு மேலமாசிவீதியில் தற்போதுள்ள விஜயகாந்த் வீடு ஓட்டுவீடாக இருந்துள்ளது. அதன்பிறகு 1961-ம் ஆண்டு புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளனர். இந்த வீட்டில்தான் விஜயகாந்த் தனது குழந்தை பருவம் முதல் இளமை காலம் வரை வளர்ந்துள்ளார். அந்த வீட்டுக்கு விஜயகாந்த் தாய் ஆண்டாள் நினைவாக ‘ஆண்டாள் பவனம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜயகாந்த் வீடு உள்ள பகுதி மீனாட்சியம்மன் கோயில் இருப்பதால் தற்போது பெரும்பாலான குடியிருப்புகள் வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன.

விஜயகாந்த் வீடு உள்பட ஒரு சில வீடுகளே தற்போது குடியிருப்புகளாக உள்ளன. மற்றவர்கள் வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகமாகவும், கடைகளாகவும் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதனால், விஜயகாந்த் இளமை பருவத்தில் இந்த வீட்டில்தான் வசித்தார் என்பது தற்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் பலருக்கு தெரியாது. பெரும்பாலும் விஜயகாந்த் வீடு அருகே கடை வைத்திருப்பர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு திரையிலும், அரசியலிலும் பார்த்த விஜயகாந்த் வசித்த வீடு மேற்கு மேலமாசி வீதியில் இருப்பதை அறிந்து ஆவலுடன் சென்றும் பார்வையிட்டு வருகிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயகாந்த் மட்டுமே சினிமா, அரசியல் இரண்டிலும் சாதித்தார். எம்ஜிஆர் ரசிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜயகாந்த் அரசியலில் கருணாநிதி அபிமானியாக இருந்தார். அதன்பிறகு, தான்பிறந்து வளர்ந்த மதுரையிலே தேமுதிக கட்சித்தொடங்கி, அரசியலிலும் எதிர்கட்சி தலைவராக தடம்பதித்தார். அவரது மரணம், அவர் பிறந்த மதுரை மட்டுமில்லாது, தென் மாவட்டங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் சென்னையில் இன்று நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல முடியாமல் மதுரையில் விஜயகாந்த் பிறந்து வளர்ந்த மேலமாசிவீதியில் உள்ள அவரது வீட்டிற்கு படையெடுத்தனர்.

மதுரை நகர்பகுதியில் வசிக்கும் இந்த தலைமுறையினருக்கு, மதுரையில் உள்ள விஜயகாந்த் வீடு தெரியாது. அவர்கள், தற்போது விஜயகாந்த் வீட்டை விசாரித்து வீட்டுக்கு சென்று பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். ரசிகர்கள், மேற்கு மேலமாசிவீதியில் உள்ள விஜயகாந்த் வீட்டை கேட்டு விசாரித்து சென்று அந்த வீட்டின் முன்நின்று வணங்கி செல்கின்றனர். தற்போது அந்த வீட்டில் விஜயகாந்த் தம்பி செல்வராஜ் குடும்பத்துடன் வசித்த வருகிறார். அந்த வீட்டில் விஜயகாந்த் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் ரசிகர்கள், பொதுமக்கள் அவரது வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி செல்வதால் மதுரையில் விஜயகாந்த் வளர்ந்த வீடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x