Published : 29 Dec 2023 05:49 AM
Last Updated : 29 Dec 2023 05:49 AM

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நெஞ்சுவலி: வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் 2-வது நாளாக சோதனை

சேலம்: முறைகேடு புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலிகாரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் (68). பல்கலைக்கழக பதிவாளர்(பொ) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைபேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ். இவர்கள் 4 பேரும் பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் அலுவலகம் தொடங்கி, லாப நோக்கோடுசெயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கடந்த 26-ம் தேதி இரவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன்படி நேற்று முன்தினம் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அன்று இரவே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதியாகி ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால், நேற்று காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட துணைவேந்தர் ஜெகநாதன் வராதது குறித்து, மருத்துவ அறிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், கணினிஅறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம், சூரமங்கலத்தில் உள்ள துணைவேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 12 ஆய்வாளர்கள் உள்பட 40 பேர் அடங்கிய போலீஸார் சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

இதில் கணினியில் பதிவேற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், அலுவலக அறைகளில் உள்ள ஃபைல்களில் இருந்து ரசீது, ஆவணங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

3 பேர் தலைமறைவு: மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேரை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மூவரும் சென்னையில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், காவல் உதவிஆணையர் நிலவழகன் தலைமையிலான போலீஸார் சென்னை விரைந்துள்ளனர். மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x