Published : 29 Dec 2023 05:42 AM
Last Updated : 29 Dec 2023 05:42 AM
சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவில், நூற்றாண்டு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வெளியிட் டனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றியுள்ளதெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்களின் அழைப்பின்பேரில் பெரியார் சென்று தலைமையேற்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, 2023 மார்ச் மாதம் முதல் ஓராண்டுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விழா நிகழ்வு இடமாற்றம்: இதன் ஒருபகுதியாக, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நேற்றுகாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்தார். இதையடுத்து, வர்த்தக மையத்தில் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.அதற்கு பதில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எளிமையாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காலை 11.15 மணிக்கு வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை, முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டஅமைச்சர்கள் வரவேற்றனர். அதன்பிறகு, பெரியார் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட கேரளமுதல்வர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார். நூற்றாண்டு மலரில் தமிழ், மலையாளம், ஆங்கில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை கேரள முதல்வர் பினராயி விஜயன்வெளியிட, முதல்வர்ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வு தொடர்பாக முதல்வர்மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் சமூகநீதியை நிலைநிறுத்தவும் பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல. அவற்றில்மிக முக்கியமானது வைக்கம் போராட்டம் ஆகும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெரியாரை வைக்கம் வீரர் என்று சொல்வது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.
கேரள வரலாற்று ஆவணங்களிலும், வைக்கம் குறித்து ஆய்வு செய்த ஆங்கில வரலாற்றாசிரியர்களும் பெரியாரின் பங்களிப்பை மறைக்காமல், மறுக்காமல் பதிவு செய்துள்ளனர். அதன் முழுத்தொகுப்பாக நூற்றாண்டு மலர் அமைந்துள்ளது. தமிழகத்தில் திமுகவும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் கொள்கை சார்ந்த அரசாக இருப்பதால் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். இன்றளவும் சமூகத்தில் ஒருசில இடங்களில் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அனைவரும் அனைத்து இடங்களையும் சமமாக நடத்தப்படுவதைச் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். சமூகநீதி, சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைக்க, நாம் நமது போராட்டப் பயணத்தை இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்வோம்.
இவ்வாறு முதல்வர் கூறி யுள்ளார்.
ஒன்றுகூட வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, ‘‘சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே சமுதாய மாற்றங்களை கொண்டு வந்துவிட முடியாது. அதை அடையமக்கள் இயக்கங்கள் எழும்ப வேண்டும். அதற்கு அடிக்கோடிட்ட போராட்டமே வைக்கம் போராட்டம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கத்தில் போராடினாலும், தற்போதுநமது வரலாறு, மொழி, கலாச்சாரம்,மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை தேசிய நலனுக்காகபாதுகாக்க நாம் ஒன்றாககூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
நமது கூட்டாட்சி அமைப்பு ஒற்றையாட்சி அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது. இதுபோன்ற மோசமான வடிவமைப்புகள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். அன்று இதே பிரச்சினை ஏற்பட்டபோது ஒன்றாக இணைந்து எதிர்கொண்டோம். அதேபோல், இப்போதும் நாம் இணைந்து நிற்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வர்த்தக மையத்தில் ஏற்பாடுகள்: சென்னை வர்த்தக மையத்தின் வாயில் பகுதி, வைக்கம் மகாதேவர் கோயிலின் முகப்பு போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது. அக்கோயிலில் உள்ள தூண், கூரை, கொடிக்கம்பங்கள் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, அதில் ‘ஓம் நமச்சிவாய’ என்றும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் மறைவால் நிகழ்ச்சியில் முதல்வரோ, கேரள முதல்வரோ பங்கேற்க இயலாமல் போய்விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT