Published : 29 Dec 2023 05:22 AM
Last Updated : 29 Dec 2023 05:22 AM
விருத்தாசலம்: விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தை 2005-ல் தொடங்கினார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார்.
2001-2006 காலகட்டத்தில் விருத்தாசலம் தொகுதியில் பாமக செல்வாக்குடன் இருந்தது. அந்த சூழலில் விஜயகாந்த் அங்கு போட்டியிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தைரியத்துடன் களம்இறங்கிய விஜயகாந்த், அப்போது17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
‘பாமக கோட்டையை தகர்த்தெறிந்த விஜயகாந்த்’ என்று ஆதரவு கருத்துகள் எழுந்தன. விருத்தாசலம் எம்எல்ஏ என்றஅங்கீகாரத்துடன் சட்டப்பேரவைக்குச் சென்ற விஜயகாந்த், தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவிலேயே வழங்கினார்.
திமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், விருத்தாசலம் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சட்டப்பேரவையில் பேசியதுடன், தனது தொகுதியில் நிலவியகுடிநீர் பற்றாக்குறையைப் போக்க,சொந்த செலவில் தண்ணீர் லாரிகளை அமர்த்தி, குடிநீர் விநியோகம் செய்தார்.
கம்ப்யூட்டர் பயிற்சி மையம்: அதேபோல, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக ஒன்றியம் வாரியாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை அமைத்தார்.தூய்மை்ப் பணியாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கினார். கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடைகளை அளித்தார். தனது பிறந்த நாளை, வறுமை ஒழிப்புத் தினமாக அறிவித்தார்.
இப்படியாக விருத்தாசலம் தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த விஜயகாந்த், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரை அங்கு போட்டியிட வைத்து, வெற்றி பெறச் செய்தார்.
தொடர்ந்து விருத்தாசலம் தொகுதியை இருமுறை கைப்பற்றிய கட்சி என்ற சாதனையை ஏற்படுத்தினார் விஜயகாந்த். 2021 தேர்தலில் அவரது மனைவி பிரேமலதா இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT