Published : 29 Dec 2023 06:06 AM
Last Updated : 29 Dec 2023 06:06 AM
சென்னை: ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப,குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அடுத்த ஆண்டு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய 2024 வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20-ம் தேதி வெளியிட்டது. அதில் 18 வகையான பணிகளில் 3772 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வு அட்டவணையில் ஆவின், மின்சாரவாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதியஅறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்), ஜுனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு)உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின்கீழும், மாநிலபோக்குவரத்துக் கழகத்தில் உதவிமேலாளர் (சட்டம்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) - சட்டம் மற்றும்முதுநிலை அலுவலர் (சட்டம்)ஆகிய பணிகள் ஒருங்கிணைந்த சட்ட பணிகள் தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பதவியிலும் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும்என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்புதிய பணியிடங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு நிரப்பப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT