Published : 21 Aug 2014 11:20 AM
Last Updated : 21 Aug 2014 11:20 AM
நீலகிரி மாவட்ட குரும்பர் இன மக்கள் ‘நட்டு ஹப்பா’ என்ற விருந்தோம்பல் நிகழ்ச்சியை 100 ஆண்டுகளுக்குப் பின் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மனித இனம் தோன்றியது முதல் சக மனிதனுடன் நட்பு பாராட்டவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் விருந்தோம்பல் முக்கிய பங்காற்றுகிறது. வீட்டுக்கு விரோதியே வந்தாலும், அவரை உபசரிக்க வேண்டும் என்பது தமிழ் கலாச்சாரம். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு விதமான விருந்தோம்பல் உள்ளது. இதில், பழங்குடி மக்களின் விருந்தோம்பல் நிகழ்ச்சி மாறுபட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் குரும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர், தோடர், கோத்தர் ஆகிய 6 பண்டைய பழங்குடியினர்களில், குரும்பர் இன மக்கள் விருந்தாளி களை அழைத்து விருந்தோம்பலில் ஈடுபடுவதை மரபாகக் கொண் டுள்ளனர்.
பாரம்பரியம், கலாச்சாரத்தில் திளைத்த விருந்தோம்பல் நிகழ்ச்சி, இன்றைய காலகட்டத்தில் மறக்கப் பட்டதால், அதை புதுப்பிக்க நீலகிரி குரும்பர் நலச் சங்கம் முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக, குன்னூர் அருகே சின்ன குரும்பாடி குரும்பர் பழங்குடியின கிராமத்தில் ‘நட்டு ஹப்பா’ எனப் படும் விருந்தோம்பல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்டது. இதில் குரும்பர் இன மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மூலிகை கள், பொருட்கள், பாரம்பரிய வாத்தியக் கருவிகளை காட்சிப் படுத்தியிருந்தனர்.
மூலிகைகள்
பழங்குடி மக்கள் தங்கள் உணவு, மருத்துவத்தில் அதிக அளவு மூலிகைகளையே பயன் படுத்தி வருகின்றனர். பூசணிக்காய், ஜாதிக்காய், சீகக்காய், முருங்கை சொப்பு (கீரை), பெதுரு அக்கி (மூங்கில் அரிசி), நடுகாசு (கிழங்கு வகை), மிளகு, சாம்பிராணி மரப்பிசின், தேன் உள்ளிட்டவை களுடன், அன்றாடம் பயன்படுத் தும் மட்பாண்டங்கள், அண்டெ (மூங்கில் பாண்டம்) ஆகியன காட் சிப்படுத்தப்பட்டிருந்தன.
இசைக் கருவிகள்
விழாக்கள், இறப்பு, ஈமச்சடங்கு உள்ளிட்ட இன்ப, துன்ப நிகழ்ச்சி களுக்கு பயன்படுத்தப்படும் கொவல் (பீப்பீ), புகுரி (புல்லாங் குழல்), தம்பட்டை, சம்ளெ மற்றும் கும்மு ஆகிய கருவிகளை இசைத்துக் காண்பித்தனர். படைப்பாற்றலை நிரூபிக்கும் வகையில் ஓவியக் கலையிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தக் கண்காட்சியில் குரும்பர் இன ஓவியரான கிருஷ்ணனின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இயற்கையோடு சார்ந்து வாழ்ந்து வருவதை பறைசாற்றும் வகையில், இயற்கை காட்சிகள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளை ஓவியங்களாக சித்தரித்து வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட குரும்பர் நலச் சங்க பொதுச் செயலாளர் மணி கூறியதாவது:
“எங்கள் கலாச்சாரத்தில் உறவினர்களை அழைக்கும் முறை இருந்துவந்தது. ‘நட்டு ஹப்பா’ என்று அழைக்கப்பட்ட குரும்பர் இன மக்களின் கலாச்சாரத்தில் ஒன்றி இருந்த விருந்தோம்பல், கால மாற்றத்தால் மறக்கப்பட்டு விட்டதால் அதை புதுப்பிக்கும் முயற்சியாக 100 ஆண்டு களுக்கு பின், செவ்வாய்க் கிழமை விருந்தோம்பல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த குரும்பர் இன மக்கள், விருந்தோம்பல் நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து பாரம்பரிய உணவு சமைத்து பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும், இனி தங்கள் கிராமங்களில் ஆண்டுதோறும் உறவினர்களை அழைத்து விருந்தோம்பல் செய்வது என உறுதி எடுத்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT