Published : 29 Dec 2023 06:10 AM
Last Updated : 29 Dec 2023 06:10 AM

இந்தியாவை பதற்ற நிலையில் வைத்திருக்க விரும்பும் சீனா, அமெரிக்கா: முன்னாள் இந்திய தூதர் விஸ்வநாதன் கருத்து

சென்னை: அமெரிக்காவும், சீனாவும் இந்தியாவை பதற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றன என்று முன்னாள் இந்திய தூதர் ஆர்.விஸ்வநாதன் கூறினார். அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே, வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவர் ஆர்.விஸ்வநாதன். ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் (இந்திய வெளிநாட்டு பணி) அதிகாரியான இவர், சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே ‘சர்வதேச உறவுகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:சர்வதேச விவகாரங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளாலும் அங்குள்ள ஊடகங்களாலும்தான் கட்டமைக்கப்படுகின்றன.

சீனா - தைவான் பிரச்சினை தொடங்கி உக்ரைன் - ரஷ்ய போர், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை என அனைத்து சர்வதேச விவகாரங்களிலும் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போர் என்பது உண்மையில் ரஷ்யாவை வீழ்த்த அமெரிக்கா தொடுத்துள்ள மறைமுகப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெர்மனிக்கு எதிரான அமெரிக்க போராகவும் இதை கருதலாம். ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்க முயல்கிறது. ரஷ்யாவும், ஜெர்மனியும் கூட்டாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் உடைய வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

காஸா பிரச்சினையில் இஸ்ரேலை பலிகடாவாக்கி மத்திய கிழக்கு நாடுகளை அமெரிக்கா சீர்குலைக்க பார்க்கிறது. கம்யூனிசத்துக்கு எதிரான போர், தீவிரவாதத்துக்கு எதிரான போர், ஊழலுக்கு எதிரான போர், குற்றங்களுக்கு எதிரான போர், போதை மருந்துகளுக்கு எதிரான போர் என அமெரிக்கா ஏதாவது ஒரு காரணத்தின் பெயரால் நாடுகளில் ஜனநாயகத்தை உடைக்க முயற்சி செய்கிறது. தனக்கு பிடிக்காத நாடுகளுக்கு எதிராக பொருளாதார போரை நடத்துகிறது. அமெரிக்காவும், சீனாவும் இந்தியா பதற்ற நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

சீனாவோ, பாகிஸ்தானோ எந்த நாடாவது நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் எந்த உலக நாடும் நமக்கு உதவி செய்ய முன்வராது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியான, நெகிழ்வான, பிரச்சினை சார்ந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x