Published : 29 Dec 2023 06:12 AM
Last Updated : 29 Dec 2023 06:12 AM

விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் கூட்டம் காரணமாக மிகவும் நிதானமாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் சென்றது. அதன் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனம் விரைந்தது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இட நெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கு அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது.

தீவுத்திடலில் அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயம்பேட்டில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்பட்டு அமைந்தகரை, கீழ்பாக்கம், எழும்பூர் வழியாக தீவித்திடலுக்கு அவரது உடல் காலை 5.46 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் நிதானமாக சென்றது. அதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு போலீஸார் போக்குவரத்தை சீர் செய்த காரணத்தால் தீவுத்திடலுக்கு விரைந்து கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x