Published : 29 Dec 2023 05:09 AM
Last Updated : 29 Dec 2023 05:09 AM

“விஜயகாந்தின் மறைவு தமிழகத்துக்கும், திரையுலகுக்கும் பேரிழப்பு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 'கேப்டன்' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு தமிழகத்துக்கும், திரையுலகுக்கும் பேரிழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அன்பிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர் 'கேப்டன்' விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலகிலும் பொதுவாழ்விலும் முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக் கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.

குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கருணாநிதி தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது கருணாநிதியின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து. தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கருணாநிதி உடல்நலன் குன்றியிருந்த போது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், மறைவெய்தியபோது. வெளிநாட்டில் இருந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராக கடற்கரையில் உள்ள கருணாநிதி ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

கருணாநிதியின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கருணாநிதி எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.

'கேப்டன்' எனத் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்தின் மறைவு தமிழகத்துக்கும். திரையுலகுக்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு. அவரை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கும். தேமுதிக தொண்டர்களுக்கும். திரையுலகத்தினருக்கும். ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x