Last Updated : 28 Dec, 2023 08:29 PM

 

Published : 28 Dec 2023 08:29 PM
Last Updated : 28 Dec 2023 08:29 PM

“எங்களுக்கு அவர் விஜயராஜ்...” - விஜயகாந்த் பள்ளித் தோழரின் உருக்கமான பகிர்வு

படப்பிடிப்புக்கு நடிகர்கள் செந்தில், பாண்டியன் ஆகியோருடன் வந்திருந்த விஜயகாந்த்தை தனது மனைவியுடன் வந்து சந்தித்த வகுப்புத் தோழர் பாலசுப்பிரமணியம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள பள்ளியில் படித்தபோது குற்றாலத்தில் விஜயகாந்த் குளித்து மகிழ்ந்ததை அவரது பள்ளித் தோழர் எம்.பாலசுப்பிரமணியம் உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 1966-67-ம் ஆண்டில் 9-ம் வகுப்பிலும், 1967-1968-ம் ஆண்டில் 10-ம் வகுப்பிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படித்துள்ளார். அப்போது அவருடன் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் படித்துள்ளார். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது சொந்த ஊரிலுள்ள இவர், தனது பள்ளித் தோழர் விஜயகாந்த் மரணமடைந்த செய்தியை கேட்டதும் கண்ணீர்விட்டு கதறி அழுதார். விஜயகாந்தின் பள்ளித் தோழனாக இருந்த காலங்களின் மலரும் நினைவுகளாக சிலவற்றை அவர் தெரிவித்தார்.

பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''விக்கிரமசிங்கபுரத்தில் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 9, 10-ம் வகுப்பில் விஜயகாந்துடன் படித்தேன். 10-ம் வகுப்பில் ஒரு பெஞ்சில் அவருடன் அமர்ந்திருப்பேன். விஜயகாந்தை விஜயராஜ் என்றுதான் அப்போது அழைப்போம். எங்களுடன் ராமலிங்கம் மற்றும் தியோடர் ஜெயச்சந்திரன் ஆகியோரும் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்போம். பள்ளி நாட்களில் சினிமாவிலோ அல்லது அரசியலிலோ பெரிய ஆர்வம் இல்லாதவராகவே விஜயகாந்த் இருந்தார். பணக்கார வீட்டுப் பிள்ளை என்றாலும் அனைத்து நண்பர்களிடமும் சகஜமாக பழகுவார். எந்த வித்தியாசமும் இல்லாமல் சகத் தோழர்களுடன் பழகி வந்தார்.

விஜயகாந்த்துடன் பாலசுப்பிரமணியம்

பள்ளியில் படித்த நாட்களில் இங்கிருந்து குற்றால சீசனின்போது குற்றாலத்திற்கு ஒன்றாக சென்று குளித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. குற்றாலத்தில் அனைவரும் குளித்து மகிழ்ந்தோம். இதுபோல் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றிலும் ஒன்றாக சேர்ந்து குளித்துள்ளோம். நான் எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தேன். விஜயகாந்த் பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். அவருக்காக எனது வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச்சென்று கொடுப்பேன். அவற்றை அவர் ருசித்து சாப்பிடுவார்.

அவர் சினிமாவுக்கு சென்றபின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளுக்கும் என்னை அழைத்து சென்றுள்ளார். பொள்ளாச்சியில் நான் மின்வாரியத்தில் பணியாற்றியபோது பல்வேறு படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளேன். என்னுடைய பள்ளித் தோழரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நான் இன்று அவர் மறைந்ததை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x